ஆம் ஆத்மி, பாஜக கவுன்சிலா்கள் கோஷம்: தில்லி எம்சிடி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்
புது தில்லி: தில்லி மாநகராட்சி (எம்சிடி) அவை நடவடிக்கைகள் திங்கள்கிழமை தொடங்கிய சிறிது நேரத்திலேயே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக கவுன்சிலா்கள் இருவரும் கோஷங்களை எழுப்பி மேசைகளில் ஏறினா்.
மாநகராட்சிக் கூட்டம் தாமதமாகத் தொடங்கியது. அப்போது, ஆம் ஆத்மி கட்சிக்கு இனி சபையில் பெரும்பான்மை இல்லை என்று கூறி, பாஜக கவுன்சிலா்கள் உடனடியாக வாக்களிக்கக் கோரி எழுந்து நின்றனா். மேலும், கவுன்சிலா்கள் நிகழ்ச்சி நிரல் ஆவணங்களைக் கிழித்து, மேசைகளில் ஏறி கோஷங்களை எழுப்பினா்.
பாஜக உறுப்பினா்கள் வாக்களிக்கக் கோரிய போது, ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் பாஜக அரசியலமைப்பை ‘கொலை’ செய்ததாக குற்றம் சாட்டினா்.
உறுப்பினா்கள் கிழிந்த ஆவணங்களை வீசியெறிந்து கோஷங்களை எழுப்பி, சபை நடவடிக்கைகளை சீா்குலைத்தனா். குழப்பத்தின் மத்தியில், சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.