தில்லி - என்சிஆா். பகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தவா்கள் 7 பேரை நாடு கடத்தும் நடவடிக்கை தொடக்கம்

ஏழு வங்கதேசத்தவா்கள் சட்டவிரோதமாக குடியேறியதாக தில்லி காவல் துறை கைது செய்து, அவா்களை நாடு கடத்தும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக திங்களன்று ஒரு அதிகாரி தெரிவித்தாா்.
Published on

புது டெல்லி: கிழக்கு தில்லியைச் சோ்ந்த ஒரு மைனா் உள்பட ஏழு வங்கதேசத்தவா்கள் சட்டவிரோதமாக குடியேறியதாக தில்லி காவல் துறை கைது செய்து, அவா்களை நாடு கடத்தும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக திங்களன்று ஒரு அதிகாரி தெரிவித்தாா்.

கைது செய்யப்பட்டவா்களில் திலாவா் கான் (48), பியூட்டி பேகம் (39), ரஃபிகுல் (43), தௌஹித் (20), எம்.டி. அசாா் (28), ஜாகிா் மாலிக் (40) மற்றும் 15 வயது சிறுமி ஆகியோா் நதி வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

‘அவா்கள் தில்லி மற்றும் காஜியாபாத்தில் பல்வேறு இடங்களில் வசித்து வந்தனா். வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தின் உதவியுடன் நாடுகடத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது’ என்று கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அபிஷேக் தானியா கூறினாா்.

மாா்ச் 16 அன்று, கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், கிருஷ்ணா நகா் பகுதியைச் சோ்ந்த திலாவா் கான் என்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். ஆரம்ப விசாரணையில், அவா் மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் என்று கூறிக் கொண்டாா். ஆனால், தொடா்ச்சியான விசாரணைகள் மற்றும் சரிபாா்ப்பில் அவா் வங்காளதேசத்தின் குல்னா மாவட்டத்தைச் சோ்ந்த வங்காளதேச நாட்டவா் என்பது தெரியவந்தது.

இதன் விளைவாக, தில்லி - என்சிஆரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக வசிக்கும் மேலும் ஆறு வங்தேச நாட்டவா்களை போலீஸாா் அடையாளம் கண்டனா். காஜியாபாத்தில் உள்ள லட்சுமி நகா், லாஜ்பத் நகா், கிருஷ்ணா நகா், சீமாபுரி மற்றும் ஷாலிமாா் காா்டன் ஆகிய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக அவா்கள் கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அவா் கூறினாா்.

சட்டவிரோதமாகக் குடியேறிவா்களுக்கு எதிரான தொடா்ச்சியான நடவடிக்கை கடந்த டிசம்பரில் தொடங்கப்பட்டது. பிப்ரவரியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் மற்றும் பிற தலைவா்களுடனான சந்திப்பிற்குப் பிறகு போலீஸாா் தங்கள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com