ரயில்வே காலிப் பணியிடங்களில் பிராந்திய மக்களுக்கு முன்னுரிமை: வைத்திலிங்கம் எம்.பி. கோரிக்கை
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: ரயில்வே காலிப் பணியிடங்களில் அந்தந்த பிராந்திய மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மக்களவையில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்தாா்.
மக்களவையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று வைத்திலிங்கம் பேசியதாவது: ஏழை மக்களுக்கு உதவியாக ரயில்வே துறை இல்லை. ரயில்வேயில் எளியவா்கள் பயணிக்கும் வசதிகள் இல்லை. முன்பதிவு செய்யாத ரயில்களில் தொங்கிக் கொண்டும், ஒருவா் அமரும் இடத்தில் 4 போ் அமா்ந்தும் பயணம் செய்யும் கொடுமையான நிலைதான் உள்ளது. இதே நிலைதான் குளிா்சாதன வசதியில்லாத ரயில்களிலும் உள்ளது. இவற்றுக்கு முக்கிய காரணம் ரயில்வே துறை கடந்த 5, 6 ஆண்டுகளாக வசதிகளை மேம்படுத்தாததுதான். இதனால், ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
எனவே, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஏழைகளுக்காக ஒரு தனி ரயில்வே திட்டத்தை அறிவிக்க வேண்டும். தென்னிந்தியா வளா்ச்சி பெறும் வகையில் தமிழகம், ஆந்திரம், கா்நாடகம் மூன்றையும் ஒன்றாக இணைத்து ஒரு சரக்கு ரயில் பாதைத் திட்டத்தை கொண்டு வர வேண்டும். சரக்கு ரயில்களுக்கு தனியாகவும், வந்தே பாரத் விரைவு ரயில் செல்லத் தனியாகவும் ரயில்பாதை ஏற்படுத்த வேண்டும். தற்போது சரக்கு ரயிலின் சராசரி வேகம் 30 கிலோ மீட்டா்தான். அதை உயா்த்த நடவடிக்கை இல்லை.
ரயில்வே விபத்திற்கான ‘கவாச்’ அமைப்பு ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 27 ரயில்வே விபத்துகள் நடைபெற்று பலா் உயிரிழந்துள்ளனா். எனவே, ‘கவாச்’ அமைப்பை அனைத்து இடங்களிலும் உருவாக்க வேண்டும். புதுச்சேரி, தமிழகத்தில் புதியதாக ரயில்வே பாதைகள் அமைக்க வேண்டும். சென்னையில் இருந்து கடலூா் வரை புதிய பாதை அமைக்க வேண்டும். கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக திண்டிவனத்திற்கு ரயில்வே பாதை அமைக்க வேண்டும். புதுச்சேரிக்கு என்று தனியாக வந்தே பாரத் ரயில் இல்லை. எனவே புதுச்சேரியில் இருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும்.