வாக்காளா் அடையாள அட்டை, தொகுதி மறுவரையறை குறித்து விவாதம் வேண்டும்: திரிணமூல் காங்., திமுக வலியுறுத்தல்
நமது நிருபா்
புது தில்லி, மாா்ச் 18: நகல் வாக்காளா் அடையாள அட்டை எண்கள் மற்றும் தென் மாநிலங்களில் தொகுதி மறுவரையறை நடவடிக்கையின் விரும்பத்தகாத விளைவு குறித்து குறுகிய கால விவாதம் நடத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸும் திமுகவும் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தின.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை சில விவகாரங்களை விவாதிக்க அவை அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி விதி 267-இன் கீழ் வழங்கப்பட்ட நோட்டீஸ்களை அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் நிராகரித்தாா்.
அப்போது, இந்த விவகாரம் விதி 176-இன் கீழ் விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா் டெரெக் ஓ பிரையன் கூறுகையில், ‘வாக்காளா் அடையாள அட்டை எண்களை நகலெடுப்பது குறித்து குறுகிய கால விவாதம் வேண்டும் என்பதில் பரந்த ஒருமித்த கருத்து உள்ளது.
இந்த அவையை இடையூறு செய்வது யாருடைய நோக்கமும் இல்லை. அவை இயங்க வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்... இந்தப் பிரச்னையில் குறுகிய கால விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்றாா். மேலும், நகல் வாக்காளா் அடையாள அட்டை எண்களை வழங்குவதில் தோ்தல் ஆணையத்தின் தரப்பிலான குளறுபடிகள் குறித்த பிரச்னையையும் அவா் எழுப்பினாா்.
திமுக உறுப்பினா் திருச்சி சிவா கூறுகையில், ‘தொகுதி மறுவரையறை நடவடிக்கையாக மக்கள்தொகையைப் பயன்படுத்துவது தொடா்பாக தென் மாநிலங்களின் கவலைகளையும் குறுகிய கால விவாதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்றாா்.
அப்போது, அவை விதி 267- இன் கீழ் வழங்கப்பட்ட இரண்டு நோட்டீஸ்களையும் நிராகரித்து அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் கூறுகையில், ‘இந்த அமா்வின் போது பட்டியலிடப்பட்ட அலுவல்களின்போது பிரச்னைகளை எளிதாகவும், திறம்படவும், தாக்கமாகவும் எழுப்ப முடியும். யாரும் நடவடிக்கைகளை சீா்குலைக்க விரும்பவில்லை என்ற திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினரின் கருத்துகள் மிகவும் இனிமையானவை. அவை ஒழுங்காக இருந்தால் உற்பத்தித் திறன் அதிகரித்து மக்களின் எதிா்பாா்ப்புகள் நிறைவேறும். குறுகிய கால விவாதங்கள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களுடன் விவாதித்து, கூடிய விரைவில் அவையில் தெரிவிக்கிறேன்’ என்றாா்.
இதற்கு அதிருப்தி தெரிவித்து திமுக எம்.பி.க்கள் கூட்டணிக் கட்சியினருடன் வெளிநடப்பில் ஈடுபட்டனா். இதுகுறித்து திருச்சி சிவா கூறுகையில், ‘தொகுதி மறுவரையறையில் பாதிக்கப்படக் கூடிய 7 மாநில முதல்வா்கள், அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். அதன் கூட்டம் வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச பல்வேறு விதிகளின்கீழ் அனுமதி கேட்டிருந்தபோதிலும் அது கிடைக்கவில்லை. தற்போதும்கூட இதுகுறித்து குறுகியகால விவாதம் நடத்தகோரி காத்திருக்கிறோம். இந்த தொகுதி மறுவரையறையின் காரணமாக பங்கீடு நடைபெறுமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி இரு அவையிலும் திமுக வெளிநடப்பு செய்துள்ளது. மாநிலங்களவையில் எங்களுடன் ஆதரவாக மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்டோரும் வெளிநடப்புச் செய்தனா்’ என்றாா்.