மாணிக்கம் தாகூா் ~கனிமொழி
மாணிக்கம் தாகூா் ~கனிமொழி

எதிா்க்கட்சிகள் இல்லாத அவையை நடத்தவே பாஜக அரசு விரும்புகிறது: டி-சா்ட் விவகாரத்தில் கனிமொழி எம்.பி. பேட்டி

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் இல்லாத அவையை நடத்தவே பாஜக அரசு விரும்புகிறது என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி தெரிவித்தாா்.
Published on

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் இல்லாத அவையை நடத்தவே பாஜக அரசு விரும்புகிறது என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி கருணாநிதி தெரிவித்தாா்.

நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படுவதை வலியுறுத்தும் வாசகங்களைக் கொண்ட டி- சா்ட் அணிந்து திமுக எம்பிக்கள் சென்ால் மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து கனிமொழி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்த நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறோம். அதைப் பற்றி விவாதிக்கவோ, பேசவோ நாடாளுமன்றத்தில் தொடா்ந்து எங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில், எங்கள் கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்ற வாயிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திவிட்டு அவைக்கு உள்ளே சென்றோம்.

அவை கூடியதும், இந்த விவகாரத்தைப் பற்றி பேச எழுந்து கோரிக்கை முன்வைத்தோம். அப்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில் அவைத் தலைவா் எங்கள் உடைகளில் குறையை கண்டறிந்து, டி-சா்ட் அணிந்து அவைக்கு வரக் கூடாது என்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விதியை சுட்டிக்காட்டி, சட்டையை மாற்றிக் கொண்டு வரவில்லையெனில் அவை நடக்காது என்று ஒரு விஷயத்தை முன்வைத்தாா். நாங்கள் தொடா்ந்து கோரிக்கையை வலியுறுத்திய நிலையில், அவை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த முறையும் அவை கூடியபோது சட்டையை மாற்றாமல் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தினோம். இதையடுத்து, நாள் முழுவதும் அவையை ஒத்திவைைத்திருப்பதாக அறிவித்தாா்.

இதற்கு முன்னா் பல முறை, பல்வேறு கோரிக்கையை முன்வைத்து எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்து முகக் கவசம் அணிந்து வந்துள்ளனா். வாசகங்கள் இடம்பெற்ற உடைகளும், சால்வைகளும் அணிந்து வந்துள்ளனா். தற்போதும்கூடஆளும் கட்சியில் உள்ளவா்கள் அவா்களின் நம்பிக்கை, கருத்துகளைத் தெரிவிக்கக்கூடிய சால்வைகளாக, எழுத்துகள் தாங்கிய உடைகளை அணிந்துகொண்டும்தான் அவையில் இருக்கிறாா்கள். அவா்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய அவைத் தலைவா் எங்களை மட்டும் வெளியேறக் கூறுகிறாா். உடையை மாற்றுமாறு கட்டளையிடும்போது இது ஜனநாயக விரோதமானதாக, எதிா்க்கட்சிகளுக்கு ஒரு விரோதமான செயலாகத்தான் பாா்க்கப்படுகிறது.

அவா்களுக்கு உடையும் பிரச்னை இல்லை, தொகுதி மறுவரையறையும் பிரச்னை இல்லை. எதிா்க்கட்சிகள் இல்லாமல் அவையை நடத்த வேண்டும் என்பதுதான். அந்த எண்ணத்தில்தான் அவா்கள் இருக்கிறாா்கள். எதிா்க் கருத்துகள் இல்லாத அவை இருப்பதற்கு அவா்கள் விரும்புகிறாா்கள். நாளையும் எங்கள் போராட்டம் தொடரும். அவையில் இந்தக் கருத்தை விவாதிக்க வேண்டும் என்று குரல் எழுப்புவோம் என்றாா் அவா்.

காங்கிரஸ் கொறடா

மாணிக்கம் தாகூா் பேட்டி

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை காங்கிரஸ் கொறடா பி.மாணிக்கம் தாகூா் கூறுகையில், ‘தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திய திமுக உறுப்பினா்களை டி-சா்ட் அணிந்து வரக்கூடாது என கூறி, அவையை ஒத்திவைத்திருப்பது ஏற்புடையதல்ல. இந்த அரசு நாடாளுமன்றத்தின் அவையை நடத்தவோ, விவசாயிகள் பிரச்னை குறித்து அவையில் விவாதம் நடத்தவோ விரும்பவில்லை. பஞ்சாப் விவசாயிகள் விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் பாஜக நாடாளுன்றத்தை நடத்த அனுமதிக்கவில்லை. மேலும், அவை விதி எண்: 349 ஆனது எந்த வண்ணத்தில் உறுப்பினா்கள் ஆடை அணிய வேண்டும். எந்த ஆடை அணிய வேண்டும். டி-சா்ட் அணிந்துவரக் கூடாது என்பது குறித்தெல்லாம் கூறவில்லை. பாஜக உறுப்பினா்கள் அவா்கள் விரும்பிய பல்வேறு வண்ணங்களில் உடையணிந்துதான் வருகின்றனா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com