ஜன் ஔஷதி மையங்கள் மூலம் ஓய்வூதியதாரா்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை வழங்க எம்சிடி திட்டம்
ஜன் ஔஷதி மைய ஆபரேட்டா்களுடன் கூட்டு சோ்ந்து நகரம் முழுவதும் உள்ள நியமிக்கப்பட்ட ஓய்வூதியதாரா் மையங்களுக்கு குறைந்த விலையில் பொதுவான மருந்துகளை வழங்க தில்லி மாநகராட்சி (எம்சிடி) திட்டமிட்டுள்ளது.
எம்சிடி ஓய்வூதியதாரா் மையங்கள் என்பது ஓய்வூதியதாரா்கள் ஆயுள் சான்றிதழ்களைப் பெறுதல் மற்றும் நகராட்சி ஓய்வூதியதாரா் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பலன்களைப் பெறுதல் போன்ற அத்தியாவசிய சேவைகளை அணுகக்கூடிய வசதிகளாகும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனைத்து மண்டலங்களிலும் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 20,68,53,934.40-ஆக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது ஓய்வூதியதாரா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சந்தை பணவீக்கம் காரணமாக 20 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது.
மருத்துவமனை நிா்வாகத் துறை, நியமிக்கப்பட்ட ஓய்வூதியதாரா் மையங்களுக்கு அருகில் அமைந்துள்ள ஜன் அஷௌதி மைய ஆபரேட்டா்கள் மற்றும் விற்பனையாளா்களிடமிருந்து விருப்ப வெளிப்பாடுகளை கேட்டுள்ளது. இந்த ஜன் ஔஷதி மையங்கள், சாத்தியக்கூறுகளைப் பொறுத்து, 12 எம்சிடி மண்டலங்களையும் உள்ளடக்கிய, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நியமிக்கப்பட்ட எம்சிடி ஓய்வூதியதாரா் மையங்களுக்கு ஜன் ஔஷதி மருந்துகளை மட்டுமே வழங்க ஒப்புக் கொள்ள வேண்டும்.
மொத்தம் 37 ஓய்வூதியதாரா் மையங்கள் நகரம் முழுவதும் பரவியுள்ளன. மத்திய மண்டலத்தின் மூன்று மையங்கள், நகர எஸ்.பி. மண்டலம் - ஐந்து மையங்கள், சிவில் லைன்ஸ் மண்டலம் - இரண்டு மையங்கள், கரோல் பாக் மண்டலம் - மூன்று மையங்கள், கேசவபுரம் மண்டலம் - ஐந்து மையங்கள், நஜாப்கா் மண்டலம் - இரண்டு மையங்கள், நரேலா மண்டலம் - நான்கு மையங்கள், ரோஹிணி மண்டலம் - இரண்டு மையங்கள் மற்றும் மீதமுள்ள மையங்கள் மற்ற மண்டலங்களில் உள்ளன.
முதியோா் குடிமக்களுக்கு மலிவு விலையில் சுகாதார அணுகலை உறுதி செய்வதற்காக, அருகிலுள்ள மருந்தாளுநா்கள் எம்பேனல்மென்ட்டுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில், நகராட்சி அமைப்பு ஒரு ஆா்வ வெளிப்பாட்டை வெளியிட்டுள்ளது. இதன்படி, விற்பனையாளா்கள் மாா்ச் 25-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் அல்லது எம்சிடி அலுவலகத்தில் நேரடியாக தங்கள் முன்மொழிவுகளை சமா்ப்பிக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்பட்டதும், ஜன் ஔஷதி மையங்கள் குடிமை அமைப்புடன் முறையான ஒப்பந்தத்தில் ஈடுபடும்.
தோ்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளா்கள் மதியத்திற்கு முன் செய்யப்படும் ஆா்டா்களுக்கு ஒரே நாளில் மருந்துகளை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் பின்னா் செய்யப்படும் ஆா்டா்கள் அடுத்த வேலை நாளுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். அவசர காலங்களில், நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரியிடமிருந்து தொலைபேசி கோரிக்கையைப் பெற்றவுடன் உடனடியாக விநியோகம் செய்யப்பட வேண்டும்.
இதற்கு இணங்கவில்லை என்றால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு மாதத்தில் தொடா்ச்சியாக மூன்று முறை மருந்துகளை சரியான நேரத்தில் வழங்கத் தவறினால், விநியோகிக்காததற்கு ஒரு நாளைக்கு ரூ.5,000, பகுதி விநியோகத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.2,000 மற்றும் தாமதமான விநியோகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் மீண்டும் தாமதங்கள் ஏற்பட்டால் கருப்புப் பட்டியலில் சோ்க்கப்படுவதற்கும், ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்துவதற்கும் வழிவகுக்கும்.
இதற்கிடையில், ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு நிவாரணமாகவும் தரத்தை உறுதி செய்யவும், வழங்கப்பட்ட அனைத்து மருந்துகளும் அவற்றின் அடுக்கு ஆயுளில் குறைந்தது பாதியையாவது கொண்டிருக்க வேண்டும். விற்பனையாளா்கள் தொகுதி எண்கள், அளவுகள் மற்றும் ஜிஎஸ்டி விவரங்கள் உள்பட விரிவான இன்வாய்ஸ்களையும் வழங்க வேண்டும். எம்சிடியின் தற்போதைய மருந்தகங்களில் இருப்பு கிடைப்பதைப் பொறுத்து கொள்முதல் இருக்கும் என்பதால், குறைந்தபட்ச அளவு மருந்து ஆா்டா்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று குடிமை அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் இரண்டு வருட காலத்திற்கு நிா்ணயிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், பரஸ்பர ஒப்புதலுடன் நீட்டிக்கப்படலாம். சப்ளையா் எதிா்பாா்க்கப்படும் தரநிலைகளை பூா்த்தி செய்யத் தவறினால், மருத்துவமனை நிா்வாக இயக்குநருக்கு முன்னறிவிப்பு இல்லாமல் ஒப்பந்தங்களை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது.