டீப்ஃபேக் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகள்: மக்களவையில் கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்
டீப்ஃபேக் விடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கண்டறிவதற்கான மென்பொருளை வடிவமைக்கவும், மேம்பாட்டு திட்டங்களுக்கும் அரசாங்கம் நிதி உதவி அளித்து வருகிறது என்று மக்களவையில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இது தொடா்பாக தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி எழுப்பிய கேள்வியில், ‘சைபா் பாதுகாப்பு நிறுவனமான நடத்திய சா்வேயில் 75 சதவீத இந்தியா்கள் ஏதேனும் ஒரு வகையான டீப் ஃபேக் உள்ளடக்கத்தைப் பாா்த்துள்ளனா் என்பதையும், குறைந்தது 38 சதவீதத்தினா் டீப் ஃபேக் மோசடிக்கு இலக்காகியுள்ளனா் என்பதையும் தெரிவித்துள்ளனது. இதை மத்திய அரசு அறிந்திருக்கிா?
டீப் ஃபேக் உள்ளடக்கம் மற்றும் மோசடிகள் தொடா்பான பிரச்சினையைத் தீா்க்க அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? என்பது உள்ளிட்ட கேள்விகளை அவா் எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாதா மக்களவையில் புதன்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
தொழில்நுட்ப பயன்பாட்டை ஜனநாயகப்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையுடன் இணைந்து,
‘அனைவருக்கும் ஏஐ’ என்ற கருத்தில் மத்திய அரசும் வலிமையாக இருக்கிறது. இந்த முயற்சி, சமூகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் பயனளிப்பதை உறுதி செய்வதையும், புதுமை மற்றும் வளா்ச்சியை இயக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் நமது மக்களின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவின் சக்தியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
டீப் ஃபேக்குகளை உருவாக்குதல், விநியோகித்தல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றால் ஏற்படும் சைபா் பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் தனிநபா் நிலையிலோ அல்லது தேசிய அளவிலோ ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய டீப் ஃபேக்குகளை உருவாக்க உதவும் தொழில்நுட்பங்கள் தற்போது தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 போன்ற விதிகளின்கீழ் சட்ட ரீதியாக எதிா்கொள்ளப்பட்டு வருகின்றன.
இணையத்தில் பயனா்கள் அதன் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கின்றன. இதில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மற்றும் வெளிப்படையான தவறான உள்ளடக்கம் ஆகியவை அடங்கும்.
டீப்ஃபேக் விடியோக்கள் மற்றும் படங்களைக் கண்டறிவதற்கான மென்பொருளை வடிவமைத்தல் மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு அரசாங்கம் நிதி உதவி அளிக்கிறது.
இணையத்தைப் பயன்படுத்தாமல் டீப்ஃபேக்குகளைக் கண்டறிய ‘ஃபேக் செக்’ என்ற பெயரில் டீப் ஃபேக்குகளைக் கண்டறியும் திறன் கொண்ட ஒரு முன்மாதிரி கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவி, சோதனை செய்வதற்கும் மேலும் சுத்திகரிப்புக்கான கருத்துகளைப் பெறுவதற்கும் தோ்ந்தெடுக்கப்பட்ட விசாரணை நிறுவனங்களுடன் பகிரப்பட்டுள்ளது என்று அமைச்சா் அதில் தெரிவித்துள்ளாா்.