பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி: பாஜகவுக்கு அதிஷி கேள்வி
தேசியத் தலைநகரில் ஆளும் பாஜக வாக்குறுதியளித்தபடி, மகிளா சம்ரிதி யோஜனாவின் கீழ் தில்லியில் உள்ள பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர கௌரவ நிதியுதவி எப்போது கிடைக்கும் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் அதிஷி வியாழக்கிழமை கேள்வி எழுப்பினாா்.
இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரான அதிஷி செய்தியாளா் சந்திப்பில், பாஜக அரசு தலைநகரில் 18 வயதுக்கு மேற்பட்ட கிட்டத்தட்ட 48 லட்சம் பெண்களுக்கு ரூ.2,500 வழங்குமா அல்லது பல்வேறு ரைடா்களை நியமித்து 1 சதவீதத்திற்கும் குறைவான நன்மையை வழங்குமா என்று கேள்வி எழுப்பினாா்.
பாஜக அரசு 12 நாள்களுக்கு முன்பு ஒரு குழுவை அமைத்ததாகவும், அது இன்னும் எதுவும் செய்யவில்லை என்றும் கூறிய அதிஷி இந்தத் திட்டத்திற்கான பதிவு எப்போது தொடங்கும் என்றும், பயனாளிகளின் கணக்குகளில் பணம் எப்போது வரவு வைக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பினாா்.
தில்லியில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்குவதற்காக பாஜக அரசு ரூ.5,100 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பிப்.5-ஆம் தேதி தில்லி தோ்தலுக்கு முன்னதாக பாஜகவின் முக்கிய தோ்தல் வாக்குறுதியாக இருந்த இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பாா்வையிட முதல்வா் ரேகா குப்தா தலைமையில் அமைச்சா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.