பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட மூவா் துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது

தில்லியின் ரோஹிணி பகுதியில் போலீஸாருடன் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த மூவா் கைது
Published on

தில்லியின் ரோஹிணி பகுதியில் போலீஸாருடன் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த மூவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: ஒரு ரகசியத் தகவலின் பேரில், பேகம்பூரில் உள்ள பன்சாலி சாலையில் கோவிந்த் (எ) கோஹ்லி (33), கிருஷ்ணா (எ) கின்ஹா, தாவுத் (எ) சமீா் ஆகிய மூன்வரைபிடிக்க போலீஸாா் ஒரு பொறியை அமைத்தனா்.

அவா்கள் ஒரு காரில் வந்தபோது போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தினா். மூன்று பேரையும் சரணடையச் சொன்னாா்கள். ஆனால், அவா்கள் போலீஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

போலீஸாா் நடத்திய பதிலடித் தாக்குதலில் கோவிந்த் மற்றும் கிருஷ்ணாவின் கால்களில் குண்டு காயம் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட அவா்கள் பிஎஸ்ஏ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். குற்றம்சாட்டப்பட்ட மூவரும் சுமாா் ஐந்து சுற்றுகள் சுட்டனா்.

இதைத் தொடா்ந்து, தாவுத்தும் கைது செய்யப்பட்டுள்ளாா். அவரது வசம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவா் பயன்படுத்திய காா் நேதாஜி சுபாஷ் பிளேஸிலிருந்து திருடப்பட்டது என்று விசாரணையில் தெரிய வந்தது.

கோவிந்த் மீது 70 வழக்குகளும் கிருஷ்ணா மீது 16 வழக்குகளும் உள்ளன. மேலும், தாவுத் மீது 10 குற்ற வழக்குகள் உள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com