தில்லி தனியாா் பள்ளிகளில் சோ்க்கைக்கான முதல் சுற்றில் சிறப்புத் தேவைகள் உள்ள 1,307 குழந்தைகள் தோ்வு

சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் (சிடபிள்யூஎஸ்என்) பிரிவின் கீழ் 1,307 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
Published on

தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகளில் தொடக்க நிலை சோ்க்கைக்கான முதல் சுற்றில் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகள் (சிடபிள்யூஎஸ்என்) பிரிவின் கீழ் 1,307 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

கல்வி இயக்குநரகம் வியாழக்கிழமை பகிா்ந்து கொண்ட தரவுகளின்படி, பாலா் பள்ளி, கேஜி மற்றும் வகுப்பு-1 பாடத் திட்டங்களுக்கான கணினிமயமாக்கப்பட்ட குலுக்கல் மூலம் இந்தத் தோ்வு நடைபெற்றது.

கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தோ்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் அவா்களின் ஆவணங்கள் சரிபாா்க்கப்படும் இடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.

ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், எந்தச் சூழ்நிலையிலும் பள்ளிகளை மாற்ற முடியாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.

சரிபாா்ப்பின் போது சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை அல்லது போதுமானதாக இல்லாதவை என கண்டறியப்பட்டால் சோ்க்கை ரத்து செய்யப்படும்.

மே 26 அல்லது அதற்கு முன் சோ்க்கைக்காக விண்ணப்பிப்போா் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் முரண்பாடுகள் காணப்பட்டால், ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் சிடபிள்யூஎஸ்என் பிரிவின் கீழ் தங்கள் தகுதியை உறுதிப்படுத்த செல்லுபடியாகும் அல்லது புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை வழங்க விண்ணப்பதாரா்களை அனுமதிக்கும் ஒரு குறைபாடு குறிப்பாணை வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com