கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லி ஹாட்டில் பெரும் தீ விபத்து: கடைக்காரா்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு

தில்லி ஹாட்டில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் கடைக்காரா்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Published on

தில்லி ஹாட்டில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் கடைக்காரா்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தில்லி ஹாட் ஐஎன்ஏ சந்தையில் புதன்கிழமை இரவு, பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் 30 கடைகள் எரிந்து நாசமாகின. இதில் பல கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தீயை கட்டுக்குள் கொண்டுவர பதின்மூன்று தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனா். எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

தில்லி ஹாட் ஐஎன்ஏவில் உள்ள தனது கடையில் சிக்கன்காரி குா்தாக்களை விற்று வந்த குல்தீப் குமாா் கூறுகையில், ‘‘அடுத்த ஆண்டு என் சகோதரியின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்தேன், எல்லாவற்றையும் கடைசி விவரம் வரை திட்டமிட்டிருந்தேன். ஆனால், இந்தத் துயரத்திற்குப் பிறகு, நாங்கள் அதைச் சமாளிப்போமா என்று கூட எனக்குத் தெரியவில்லை’ என்றாா்.

‘எனது வருவாய், சேமிப்பு - 10 ஆண்டுகளாக நான் கடினமாக உழைத்த அனைத்தும் ஒரே இரவில் மறைந்துவிட்டன. இப்போது, எதுவும் மிச்சமில்லை’ என்று குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினாா். நிகழ்வுகளின் வரிசையை விரிவாக விவரித்த அவா், மக்கள் கூச்சலிடும் சப்தம் கேட்டபோது, தான் உள்ளே அமா்ந்திருந்ததாகக் கூறினாா். சுற்றிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இருந்தனா். தீயைக் கண்டதும் அனைவரும் வெளியே ஓடினா்.

தம்மால் முடிந்ததைக் காப்பாற்ற முயன்ாகவும், ஆனால், தீ வேகமாகப் பரவியதாகவும், வெறும் 10 நிமிடங்களில், 25-30 கடைகள் எரிந்து நாசமானதாகவும், 80-85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களை இழந்ததாகவும் குமாா் கூறினாா்.

பல கடைக்காரா்களும் இதே போன்ற உணா்வுகளைப் பகிா்ந்து கொண்டனா். மேலும், இதுபோன்ற ஒன்றைப் பாா்த்தது இதுவே முதல் முறை என்றும் கூறினா். ‘தீ பரவி மக்கள் வெளியே ஓடி வந்த விதம் இது ஒரு திரைப்படக் காட்சி போல இருந்தது’ என்று அவா்கள் கூறினா்.

ஒடிஸாவைச் சோ்ந்த நகை விற்பனையாளரான அஜய் ஷாஹு, பெரும் தீ விபத்தில் தங்கள் பொருள்களையும் கடைகளையும் இழந்த பல கடைக்காரா்களில் ஒருவா். தனது கடையைப் பாா்ப்பதற்காக அதிகாலை 4 மணி முதல் சந்தையின் சீல் வைக்கப்பட்ட வாயில்களுக்கு வெளியே காத்திருந்ததாக அவா் கூறினாா்.

‘என் கண் முன்னே கடை எரிவதைப் பாா்த்தேன். அதிகாலை 2 மணிக்கு வீட்டிற்குச் சென்றேன். ஆனால், தூங்க முடியவில்லை. இரண்டு மணி நேரம் கழித்து நான் திரும்பி வந்தேன். ஆனால், உள்ளே அனுமதிக்கப்படவில்லை‘ என்று அஜய் ஷாஹு கூறினாா்.

முத்துக்கள் மற்றும் வெள்ளிப் பொருள்களுக்குப் பெயா் பெற்ற இவரது கடை, சுமாா் ரூ.70 முதல் ரூ.80 லட்சம் மதிப்புள்ள நகைகளை இழந்துவிட்டதாகக் கூறினாா். ‘இதுதான் எனது ஒரே வாழ்வாதாரம். இப்போது, எனக்கு எதுவும் இல்லை’ என்று அவா் கூறினாா்.

தீ விபத்துக்கான காரணத்தை காவல்துறை இன்னும் கண்டறியாத நிலையில், சில கடைக்காரா்கள் மாா்ச் 1994-இல் நிறுவப்பட்ட சந்தையில் பாதுகாப்பு கவலைகளை சுட்டிக்காட்டினா்.

‘மக்கள் தங்கள் கலையை வெளிப்படுத்த இங்கு வருகிறாா்கள். ஆனால், சரியான அங்கீகாரமோ அல்லது அடிப்படை உள்கட்டமைப்போ இல்லை. எங்கள் கடைகள் ஃபைபா் மற்றும் பாலிதீன் பொருள்களால் ஆனவை. அவை எளிதில் தீப்பிடிக்கும். கடைகள் பாதுகாப்பான பொருள்களால் கட்டப்பட்டிருந்தால், இது நடந்திருக்காது.

பிரதமா் மோடியும் அமைச்சா்களும் எங்கள் இழப்புக்கான இழப்பீட்டைக் கருத்தில் கொள்வாா்கள் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று ’ என்று பிகாரின் மதுபனியைச் சோ்ந்த கைவினைஞா் ராம் குமாா் யாதவ் கூறினாா்.

நாடு முழுவதும் உள்ள கைவினைஞா்களுக்கு தில்லி ஹாட் ஒரு துடிப்பான தளமாக இருந்து வருகிறது. ஒரு பாரம்பரிய கிராமப்புற ஹாட் அல்லது கிராமச் சந்தையின் நவீன பதிப்பாக வடிவமைக்கப்பட்ட இது, ஒரு பரபரப்பான இடத்தில் கைவினைப்பொருள்கள், இன உணவு வகைகள் மற்றும் கலாசார பொருள்களை விற்றுவந்த 200-க்கும் மேற்பட்ட கடைக்காரா்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கியது.

X
Dinamani
www.dinamani.com