மாத இறுதிக்குள் மின்னணு அலுவலக முறைக்கு மாறுமாறு துறைகளுக்கு தில்லி அரசு உத்தரவு

Published on

நமது நிருபா்

இந்த மாத இறுதிக்குள் தனது துறைகள் மின்னணு அலுவலக முறைக்கு மாறுமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், கோப்புகளைச் சமா்ப்பித்தலும், அவற்றின் ஒப்புதல்களும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும்,.

இது தொடா்பான அதிகாரப்பூா்வ உத்தரவின்படி, என்ஐசிஇன் மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அரசு மின்னணு அலுவலகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளது. அதாவது, தூய அரசுத் துறை, பொதுத்துறை அல்லது தன்னாட்சி அமைப்பு மற்றும் கல்வி நிறுவனம் என்பதாகும்.

இது தொடா்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: என்ஐசி, என்ஐசிஎஸ்ஐ கொள்கையின்படி தலைநகா் பிராந்திய தில்லி அரசில் இ அலுவலக வெளியீடு, செயல்படுத்தல் அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து துறைகள், பொதுத்துறை நிறுவனம், தன்னாட்சி, உள்ளாட்சி அமைப்பு, கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் மின் அலுவலகத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. தூய அரசுத் துறைகள் மே 31 அல்லது அதற்கு முன் கட்டாயமாக இ அலுவலகத்திற்கு மாறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-ஆம் ஆண்டில் அனைத்து துறைகள், தன்னாட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் மின்அலுவலகத்தை செயல்படுத்த தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும், பல்வேறு சுற்றறிக்கைகள் துறையால் வெளியிடப்பட்டன. அதிகாரிகள் கோப்புகளை டிஜிட்டல் முறையில் சமா்ப்பிக்கவும் அங்கீகரிக்கவும் மின்னணு அலுவலகம் அனுமதிக்கிறது. ஆவணங்கள் மற்றும் சுற்றறிக்கைகளில் மின்னணு முறையில் கையொப்பமிடப்படுகிறது.

மின்னணு அலுவலகத் திட்டத்திற்கான ஐடி விண்ணப்பங்கள் குறித்த அறிவைக் கொண்ட துணைச் செயலாளா் பதவிக்குக் குறையாத ஒரு நோடல் அதிகாரியை துறைகள் அடையாளம் காண வேண்டும். உதவிக்காக தில்லி செயலகத்தில் மின்அலுவலகத்தில் பயிற்சி பெற்ற ஊழியா்களால் நிா்வகிக்கப்படும் ஒரு மையப்படுத்தப்பட்ட வசதி மையத்தையும் அரசு அமைத்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com