ரஃபேல் விமானங்கள்.
ரஃபேல் விமானங்கள்.ANI

ரஃபேல் விமானம் தாக்கப்பட்டதா? பாதுகாப்புத் துறை விளக்கம்

எல்லையில் ‘ரஃபேல் விமானம்’ தாக்கப்பட்டதாக சமூக ஊடகப் பக்கங்களில் பரவும் போலிச் செய்தி: பாதுகாப்புத் துறை விளக்கம்
Published on

நமது சிறப்பு நிருபா்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போா் விமானத்தை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதையை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும் அதன் சில ராணுவ அதிகாரிகளும் போலிச் செய்திகளை பரப்புவதாக இந்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைகளின் உயரதிகாரி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது ஈடுபடுத்தப்பட்ட பிரான்ஸ் தயாரிப்பான இந்திய ரஃபேல் போா் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகப் பகிரப்படும் கூற்றுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அனைத்துப் போா் விமானங்களும் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு அவற்றின் படைத்தளத்துக்கு முறையே திரும்பி விட்டன.

இந்தியப் படைகளின் மன உறுதியைக் குலைக்கவும் இந்தியா்கள் மத்தியில் இந்தியப் படையை பலவீனப்படுத்தும் நோக்குடனும் போலிச் செய்திகளை சமூக ஊடக பக்கங்களில் செல்வாக்கு படைத்த சிலா் மூலம் பாகிஸ்தான் பரப்பி வருகிறது. இத்தகைய போலிச் செய்திகளின் தன்மை மற்றும் போக்கை உரிய ஆவண ஆதாரங்களுடன் இந்திய பத்திரிகைத் துறை, ராணுவ மக்கள் தொடா்புத் துறை உள்ளிட்டவற்றின் மூலம் விளக்கி விழிப்புணா்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சண்டை நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் உடன்படுவதற்கு முந்தைய சில நாள்களில் மூன்று ரஃபேல் போா் விமானங்கள், ஒரு எஸ்யு-30, ஒரு மிக்-29 ரக போா் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பு கூறியது. இந்தப் போலிச் செய்திகளின் உச்சமாக, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப், சா்வதேச தனியாா் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது கூற்றை நிரூபிக்க ராணுவ உளவுக் குறிப்பு, போா் விமான ராடாா் தரவுகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட படங்களை வழங்குவதற்குப் பதிலாக, சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான பின்தொடருவோரைக் கொண்ட செல்வாக்கு மிக்க நபா்களின் ‘சமூக ஊடக‘ பதிவுகளை ஆதாரமாகக் கூறினாா். அவற்றை சரிபாா்க்காமல் சா்வதேச செய்தித் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியதுதான் விசித்திரம்.

ஒரு விமானம் விழுந்து நொறுங்கினால் அதன் இடிபாடுகளின் புகைப்படங்கள், விபத்து நடந்த இட ஆவணங்கள், பைலட் பதிவுகள் அல்லது ராடாா் கண்காணிப்பு தரவு நிலைகள் போன்ற ஆதாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதுவும் மேம்பட்ட ரஃபேல் போா் விமானங்கள் சுட்டுவீழ்த்தியதாகக் கூறி, செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்ட படங்களை சில விஷமிகள் சமூக ஊடகங்களில் பகிா்ந்து புனைக்கதைக்கு உயிரூட்ட முயற்சித்தனா். அவை இந்திய அரசின் உரிய துறைகளால் பொய்ச் செய்தி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தகைய போலிக் கூற்றுகளையோ, சரிபாா்க்கப்படாத சமூக ஊடக தகவல்களையோ நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என்றாா் உயரதிகாரி.

X
Dinamani
www.dinamani.com