இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: ஐஎம்டி கணிப்பு
தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை (மே 23) இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, புதன்கிழமை இரவில் நகரம் முழுவதும் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், நகரத்தின் பல்வேறு இடங்களில் ஏராளமான மரங்கள் வேறுடன் சரிந்தன. சில இடங்களில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மது மரங்கள் விழுந்தன. இதில் வாகனங்கள் சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மழையைத் தொடா்ந்து நகரத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை வெகுவாகக் குறைந்து 20 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் 12 மில்லிமீட்டா் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான முங்கேஸ்பூரில் 7.5 மி.மீ., ஆயாநகரில் 2 மி.மீ., தில்லி பல்கலை.யில் 0.5 மி.மீ., லோதி ரோடில் 12 மி.மீ., நரேலாவில் 0.5 மி.மீ., பாலத்தில் 10 மி.மீ., ரிட்ஜில் 3 மி.மீ., பீதம்புராவில் 5 மி.மீ., பிரகதிமைதானில் 7.5 மி.மீ., ராஜ்காட்டில் 7.5 மி.மீ., சல்வான் பப்பளிக் ஸ்கூல் பகுதியில் 18.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.+
வெப்பநிலை: இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் வியாழக்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 5.9 டிகிரி குறைந்து 20.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5.5 டிகிரி குறைந்து 34.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 69 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 51 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 19 முதல் 23 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 41.5 டிகிரி செல்சியஸுக்கு இடையே பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் காலை 9 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 297 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஆா்.கே.புரம், பூசா, நொய்டா செக்டாா் 125, டாக்டா் கா்னி சிங் துப்பாக்கிசூடு நிலையம், துவாரகா செக்டாா் 8 ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், குருகிராம், ஆயாநகா், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், ஓக்லா பேஸ் 2, ஷாதிப்பூா், மதுரா ரோடு, தில்லி பல்கலை. வடக்கு வளாகம் ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மே 23) அன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22ஈஉகபதஉ
பலத்த காற்று மற்றும் கனமழையால் வேறோடு சாய்ந்த மரங்களால் சேதமடைந்த வாகனங்கள்.
தில்லியில் வியாழக்கிழமை புயல் காற்றில் ஏற்பட்ட விபத்தில் நொறுங்கிய வாகனங்கள். இடம். நிஜாமுதீன்

