குட்கா துப்பிய தகராறில் இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவா் கைது

Published on

வடகிழக்கு தில்லியின் கஜூரி காஸ் பகுதியில் குட்கா துப்பியதற்காக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது 35 வயது இளைஞா் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்ததாக காவல்துறை அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கஜூரி காஸில் வசிக்கும் ஆமிா் என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட நபரின் முதுகில் துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

முன்னதாக, சனிக்கிழமை இரவு குட்கா துப்பியதற்காக அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே முன்பகை இல்லை.

சூடான வாக்குவாதத்தின் போது, நபா்களில் ஒருவா் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஆமிா் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

தகவலின் பேரில், ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆரம்பகட்ட விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் அமன் (20), அவரது தந்தை இா்ஃபான் (40) மற்றும் ரெஹான் (18) ஆகிய மூன்று போ் குற்றம் சாட்டப்பட்டவா்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்களில் அமனை போலீஸாா் கைது செய்துள்ளனனா். மற்ற இருவரையும் கைது செய்யவும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மீட்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com