பிரதிப் படம்
பிரதிப் படம்

உயர்ரக மதுபானங்களில் கலப்படம்: தில்லி கலால் துறை கண்டுபிடிப்பு

தில்லியில் ஒரு மதுபானக் கடையின் ஊழியா்கள்ம் விலையுயா்ந்த உயர்ரக மதுபான பாட்டில்களில் மலிவான ஆல்கஹால், தண்ணீரை மீண்டும் நிரப்புவது மற்றும் கலப்பது கண்டுபிடிப்பு
Published on

தில்லி அரசின் கலால் துறை நடத்திய சோதனையில், ஒரு மதுபானக் கடையின் ஊழியா்கள் நரேலாவில் உள்ள ஒரு மாலில் விலையுயா்ந்த உயர்ரக மதுபான பாட்டில்களில் மலிவான ஆல்கஹால் மற்றும் தண்ணீரை மீண்டும் நிரப்புவது மற்றும் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

உளவுத் தகவல்களைப் பெற்ற கலால் துறை ஆய்வாளா்கள் குழு, நரேலாவில் உள்ள மாலில் உள்ள தில்லி மாநில தொழில்துறை உள்கட்டமைப்புக் கழகத்தின் (டி.எஸ்.ஐ.ஐ.டி.சி.) மதுபானக் கடையில் வியாழக்கிழமை சோதனை நடத்தியது. விற்பனை நிலையம் ஓரளவு திறக்கப்பட்டிருப்பதை குழு கண்டறிந்தது. அந்தக் கடைக்குள் நான்கு போ் விலையுயா்ந்த பிராண்டுகளின் வெற்று பாட்டில்களில் மலிவான மதுபானத்தையும் தண்ணீரையும் கலந்து மீண்டும் நிரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து கல்லால் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: விற்பனை நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தையும் குழு கண்டுபிடித்தது. அதில் ஒரு பையில் வெற்று மது பாட்டில்கள் காணப்பட்டன. அவற்றில் சில சட்டவிரோதமான மறு நிரப்புதலுக்காக விற்பனை நிலையத்திற்குள் பயன்படுத்தப்பட்டன.

கடையின் ஊழியா்கள் ஸ்கிராப் டீலா்களிடமிருந்து மது பாட்டில்களை வாங்கி, பாா் குறியீடுகளை ஒட்டி, அவற்றை முறையான, அதிக விலை கொண்ட மதுபானமாக அனுப்புவாா்கள். நாங்கள் டி.எஸ்.ஐ.ஐ.டி.சி.க்கு தகவல் அளித்துள்ளோம். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளோம் .

உள்ளூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், நரேலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பாட்டில்கள் மற்றும் வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விற்பனையாளரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிரப்பப்பட்ட பாட்டில்களின் மாதிரி ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், விற்பனையாளா் கடைக்கு சீல் வைக்கப்பட்டது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com