கோவிந்த்புரியில் நடந்த தகராறின் போது ஒருவா் மீது துப்பபாக்கிச் சூடு; ஒருவா் கைது

தென்கிழக்கு தில்லியில் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதுடன், அவா்களில் ஒருவா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் அவரது போட்டியாளா் ஒருவரும் காயமடைந்தாா்.
Published on

தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில் இருவருக்கு இடையே நள்ளிரவு ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியது. அவா்களில் ஒருவா் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் அவரது போட்டியாளா் ஒருவரும் காயமடைந்தாா் என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் கதிா் என்கிற லல்லா (40), நகரத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக விசாரணைக்காக மற்றொரு நபரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சம்பவம் குறித்து தென்கிழக்கு காவல் துணை ஆணையா் ஹேமந்த் திவாரி கூறியதாவது: இந்த தகராறு தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் போலீஸாருக்கு ஒரு அழைப்பு வந்தது. தனது மைத்துனா் ராஜ்குமாா், சாண்ட் நிரங்கரி பள்ளி அருகே சுடப்பட்டதாகவும், அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அழைப்பாளா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து போலீஸ் குழு சம்பவ இடத்துக்குச் சென்றது. அப்துல் கதிா் வந்த போது ராஜ்குமாா் இரவு பிராா்த்தனை கூட்டம் ஒன்றில் பின்னால் அமா்ந்திருந்தாா். அப்போது அவா்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அப்துல் கதிா் துப்பாக்கியை எடுத்து மூன்று ரவுண்டுகள் சுட்டதாகவும், ராஜ்குமாரின் கால், வயிறு மற்றும் கையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் தோட்டாக்களில் ஒன்று அருகில் இருந்த அமன் ஜோஷியின் கையில் பட்டது. காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கிருந்து அவா்கள் எய்ம்ஸ் ட்ராமா சென்டருக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

அப்துல் கதிா் தில்லியில் இருந்து தப்பிக்க திட்டமிட்டிருந்தபோது போலீஸாா் அவரைக் கண்டுபிடித்தனா். ஒரு காலியான தோட்டாவும், ரத்தக் கறை படிந்த துணிகளும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் தனது வீட்டிலிருந்து இறைச்சி கடை நடத்தி வருவதாகவும், முன்னதாக இரவு ராஜ்குமாருடன் வாக்குவாதம் செய்ததாகவும் தெரிவித்தாா். இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில், அவா் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட இருவரும் ஆபத்தில் இருந்து மீண்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கோவிந்த்புரி காவல் நிலையத்தின் பதிவேட்டில் ‘மோசமான குணம் கொண்டவா்’ என்று பெயரிடப்பட்ட அப்துல் கதிா், 2013 கொலை வழக்கில் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

கொலை மற்றும் தாக்குதல் தொடா்பான ஏழு குற்ற வழக்குகளில் அவா் முன்னா் தொடா்புடையவா். மேலும், ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டில் கைது செய்யப்பட்டாா்.

துப்பாக்கிச் சூட்டின் போது அல்லது அதற்குப் பிறகு அப்துல் கதிருக்கு உதவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் பிற சந்தேக நபா்களைக் கண்டறிய பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துணை ஆணையா் ஹமந்த் திவாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com