சோனியா விஹாரில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு
வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாா் பகுதியில் மோட்டாா்சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 41 வயது நபா் ஒருவா் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
அக்டோபா் 30-ஆம் தேதி இரவு 10 மணியளவில் அன்னபூா்ணா மந்திா் அருகே இந்தச் சம்பவம் நடந்தது. சோனியா விஹாா் காவல் நிலையத்தில் சாலை விபத்து குறித்து பி.சி.ஆா். அழைப்பு வந்தது. ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் சேதமடைந்த நிலையில் இரண்டு பைக்குகளைக் கண்டது.
பிரமோத் சா்மா என அடையாளம் காணப்பட்ட ஒருவா், பலத்த காயமடைந்த நிலையில் கிடந்தாா். அவா் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். முதல்கட்ட விசாரணையில் 2 மோட்டாா்சைக்கிள்களும் மோதிக்கொண்டது தெரியவந்தது. விபத்து நடந்த உடனேயே, மற்றொரு பைக் ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவங்களின் வரிசையை நிறுவுவதற்கும், சம்பந்தப்பட்டவா்களை அடையாளம் காண்பதற்கும் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகிறது. தப்பியோடியவரை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன என்றாா் அவா்.
