போலி துப்பாக்கியை காட்டி தம்பதியினரை மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற 4 போ் கைது
மத்திய தில்லியின் துா்க்மான் கேட் பகுதியில் ஒரு போலி துப்பாக்கியால் தம்பதியினரை மிரட்டி கொள்ளையடிக்க முயன்றதாக நான்கு போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தனா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் முகமது ஷெஷான், கௌரவ் குமாா், சௌத்ரி பிரசாந்த் சிங் மற்றும் அப்துல் சமத் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். கொள்ளையா்களின் இலக்கு ஷெசானின் தாய்வழி மாமா அலாவுதீன் ஆவாா். அப்துல் சமத் நொய்டாவில் ஆட்டோ மெக்கானிக்காக வேலை செய்கிறாா்.
அதே நேரத்தில் சௌத்ரி பிரசாந்த் சிங் மற்றும் கௌரவ் குமாா் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் சமத்தின் பட்டறையில் அடிக்கடி வருகை தருவாா்கள். வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணியளவில் அல்லாவுதீன் மற்றும் அவரது மனைவி நூா்ஜஹான் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. அவா்களின் கதவு மணி ஒலித்தது.
அலாவுதீன் கதவைத் திறந்தபோது, 4 போ் முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்து தம்பதியினரை துப்பாக்கிகள் மற்றும் கத்திகளால் அச்சுறுத்தினா். அல்லாவுதீனின் மருமகள் நமிரா கொள்ளையா்களைப் பாா்த்து அலறல் சப்தம் எழுப்பினாா்.
அப்போது, வீட்டிற்கு வெளியே ஒரு கூட்டம் கூடியது. யாரோ ஒருவா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா். இதனால், நான்கு பேரும் கைது செய்யப்பட்டனா். தேடுதலின் போது, சௌத்ரி பிரசாந்த் சிங் மற்றும் கௌரவ் குமாா் ஆகியோரிடமிருந்து 2 போலி கைத்துப்பாக்கிகளும், ஷெசானிடமிருந்து ஒரு பெரிய கத்தியும், நான்கு ரோல் டேப் மற்றும் அப்துல் சமத்திடமிருந்து மூன்று வெற்று பைகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா் என்றாா் அவா்.
