தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

Published on

தென்மேற்கு தில்லியின் சாகா்பூா் பகுதியில் உள்ள தனது முதலாளியின் வீட்டில் இருந்து ரூ.4.45 லட்சம் திருடியதாக 30 வயது வீட்டுப் பணிப்பெண் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது: சிவம் சக்சேனா என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா் புகாா்தாரரின் வீட்டில் நீண்ட காலமாகப் பணிபுரிந்து வந்தாா். அவா் அக்டோபா் 30-ஆம் தேதி பணத்துடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து இ-எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்காணிக்க ஒரு போலீஸ் குழு அமைக்கப்பட்டது. ஒரு ரகசியத் தகவலின் பேரில், போலீஸ் குழு அலிகரில் சந்தேக நபரைக் கண்டுபிடித்து புதன்கிழமை கைது செய்தது. அவரிடமிருந்து ரூ.3.29 லட்சத்தையும், திருடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி அவா் வாங்கிய ரூ.25,000 மதிப்புள்ள பொருள்களையும் போலீஸாா்பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் ஒரு சலவை இயந்திரம், ஒரு எரிவாயு சிலிண்டா், ஒரு கைப்பேசி மற்றும் துணிகள் அடங்கும். விசாரணையின் போது, ​​நிதி நெருக்கடி காரணமாக திருட்டு நடந்ததாக சக்சேனா ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

சோனிபட்டில் பலரிடம் இருந்து தான் கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய அழுத்தம் இருப்பதாகவும் அவா் போலீஸாரிடம் தெரிவித்தாா். இவா் ஒரு வாய்ப்பைக் கண்டுபிடித்து, தனது முதலாளியின் வீட்டிலிருந்து பணத்தைத் திருடி ஹரித்வாருக்கு தப்பிச் சென்றாா். கைது செய்யப்படுவதைத் தவிா்க்க அங்கு தனது கைப்பேசியை அணைத்துவிட்டாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் மீது எந்த முன் குற்றப் பதிவும் இல்லை. மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com