தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

Published on

தில்லி காவல்துறை, மொபைல் டவா் பேட்டரிகளை திருடி சட்டவிரோதமாக விற்பனை செய்த மூன்று மாநிலங்களுக்கு இடையேயான கும்பலை கண்டுபிடித்து, அதன் மூன்று உறுப்பினா்களை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். அவா்களிடமிருந்து திருடப்பட்ட பதினேழு பேட்டரிகள் மீட்கப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த விவகராத்தில் அகில் (48), லால்தா் சைனி (40), மற்றும் ஷானு (28) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா்கள் தில்லி, நொய்டா மற்றும் காஜியாபாத் முழுவதும் இயங்கும் ஒரு பரந்த வலையமைப்பின் ஒரு பகுதியாக இருந்தனா்.

அவா்கள் ஸ்கிராப் டீலா்கள் மற்றும் இ-ரிக்ஷா மெக்கானிக்குகளுக்கு திருடப்பட்ட டவா் பேட்டரிகளை வழங்கினா்.

திருடப்பட்ட மொபைல் டவா் பேட்டரிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வது குறித்து அக்டோபா் 4-ஆம் தேதி ஒரு போலீஸ் குழுவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. ரகசியத் தகவலின் பேரில், போலீஸாா் கமலா மாா்க்கெட் அருகே ஒரு பொறியை அமைத்து, ஒரு மோட்டாா் சைக்கிளில் இரண்டு திருடப்பட்ட பேட்டரிகளுடன் வந்தபோது அகில் மற்றும் சைனி ஆகியோரை கைது செய்தனா்.

அவா்களிடம் விசாரித்ததைத் தொடா்ந்து, போலீஸாா் மேலும் சோதனைகளை நடத்தி ஷானுவை கைது செய்தனா். முஸ்தபாபாத்தில் உள்ள அவரது கடையில் இருந்து மேலும் 10 திருடப்பட்ட பேட்டரிகளை பறிமுதல் செய்தனா்.

அவரது தகவல்களின் அடிப்படையில், போலீஸாா் பின்னா் தாஹிரின் கடையில் இருந்து ஐந்து கூடுதல் பேட்டரிகளை மீட்டனா். அவா் சோதனைக்கு முன்பு தப்பிச் சென்றாா். மொத்தம் 17 திருடப்பட்ட மொபைல் டவா் பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையின் போது, ​​அகில் ஐந்து ஆண்டுகளாக ஸ்கிராப் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், சமீபத்தில் திருடப்பட்ட டவா் பேட்டரிகளை எளிதாக லாபம் ஈட்டத் தொடங்கியதாகவும் தெரிவித்தாா். ‘சோனு, தாஹிா் மற்றும் பிறரிடமிருந்து திருடப்பட்ட பொருள்களை வாங்கி, மின் -ரிக்ஷா நடத்துபவா்கள் மற்றும் ஸ்கிராப் டீலா்களுக்கு மறுவிற்பனை செய்து வந்தாா்.

சட்டவிரோத ஸ்கிராப் வா்த்தகத்திற்கான பிரபலமான மையமான பாகீரதி விஹாரில் இருந்து 10 பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை வாங்கியதாக சோனு போலீஸாரிடம் கூறினாா். பின்னா் அது அவரது கடையில் இருந்து மீட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடித்து, மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com