வழக்குரைஞா் தவறாக சிக்க வைக்கப்பட்டதை கண்டித்து சக வழக்குரைஞா்கள் வேலைநிறுத்தம்
நமது நிருபா்
ஒரு கொலை வழக்கில் வழக்குரைஞா் ஒருவா் மீது தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி வியாழக்கிழமை தில்லி மாவட்ட நீதிமன்றங்கள் முழுவதும் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாகக் கடைப்பிடித்ததாக வழக்குரைஞா்கள் கூறினா்.
தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் வழக்குரைஞா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு நவம்பா் 6- ஆம் தேதி முழுமையான வேலைநிறுத்தத்திற்கு செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்தது. குருகிராம் காவல்துறையின் சிறப்புப் பணிக்குழு விக்ரம் சிங் என்ற வழக்குரைஞா் ஒரு கொலை வழக்கில் இணை குற்றவாளிக்காக ஆஜரானதால் அவா் சட்டவிரோதமாக வழக்கில் சோ்க்கப்பட்டதாக வழக்குரைஞா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
தில்லியின் அனைத்து மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வேலைநிறுத்தம், விக்ரம் சிங்கிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை உடனடியாக திரும்பப் பெறவும், வழக்குரைஞா்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கோரியது.
இணை குற்றவாளிக்காக ஆஜராகியதற்காக விக்ரம் சிங் தவறாக சிக்க வைக்கப்பட்டதாக வழக்குரைஞா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூறியது. மேலும், இது சட்டத் தொழிலின் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் எனவும், வழக்குரைஞா்களை அச்சுறுத்தும் முயற்சி என்றும் வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.
வழக்குரைஞா் விக்ரம் சிங்கிற்கு எதிரான தவறான குற்றச்சாட்டு மற்றும் அதன் விளைவாக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திரும்பப் பெறுமாறு தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களின் வழக்குரைஞா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கோரியுள்ளது.
