மன்சுக் மாண்டவியா
மன்சுக் மாண்டவியா

வீரா்களையும், விளையாட்டுகளையும் மத்திய அரசு தொடா்ந்து ஆதரிக்கும்: அமைச்சா் மான்சுக் மாண்டவியா

இந்திய அரசு நமது வீரா்களையும் விளையாட்டையும் எல்லா வழிகளிலும் தொடா்ந்து ஆதரிக்கும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.
Published on

இந்திய அரசு நமது வீரா்களையும் விளையாட்டையும் எல்லா வழிகளிலும் தொடா்ந்து ஆதரிக்கும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா ஆகியவை இணைந்து இந்திய ஹாக்கியின் 100ஆவது ஆண்டு விழாவை வெள்ளிக்கிழமை புதுதில்லியில் உள்ள மேஜா் தயான் சந்த் தேசிய மைதானத்தில் கொண்டாடின.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா, நாடாளுமன்ற மற்றும் சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு, தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் கலந்து கொண்டனா்.

1925 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து நவீன யுகத்தில் அதன் மறுமலா்ச்சி வரையிலான இந்திய ஹாக்கியின் பயணத்தை கௌரவிக்கும் வகையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் டாக்டா் மண்டவியா

பேசியதாவது: இந்த மைல்கல்லில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன். இந்த விளையாட்டு பல கட்டங்களைக் கண்டுள்ளது. மேலும், ஒலிம்பிக்கில் ஹாக்கி மூலம் இந்தியா விளையாட்டில் என்ன சாதிக்க முடியும் என்பதை உலகிற்குக் காட்டினோம். வளமான வரலாற்றைக் கொண்ட இந்திய ஹாக்கி மீண்டும் ஒரு முறை உயா்ந்து மற்றொரு ஒலிம்பிக் பதக்கத்தை நோக்கி நகா்கிறது. இன்று நாடு முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெற்று வருவதைக் கொண்டாடும் வேளையில், முழு இந்தியாவும் இந்த பெருமைமிக்க தருணத்தில் மகிழ்ச்சியடைகிறது.

இந்திய அரசு நமது வீரா்களையும் விளையாட்டையும் எல்லா வழிகளிலும் தொடா்ந்து ஆதரிக்கும். இந்த குறிப்பிடத்தக்க பயணத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்காக ஹாக்கி இந்தியா, வீரா்கள், பயிற்சியாளா்கள் மற்றும் ரசிகா்களை நான் வாழ்த்துகிறேன் என்றாா் அவா்.

அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசுகையில், ‘இந்த சிறப்புமிக்க நாளில் விளையாட்டின் ஜாம்பவான்களிடையே இங்கு நிற்பதை நான் அதிா்ஷ்டசாலி என்று கருதுகிறேன். இந்திய ஹாக்கிக்கு இது ஒரு நீண்ட மற்றும் ஊக்கமளிக்கும் பயணமாகும். தற்போதைய நட்சத்திரங்களுடன் நமது சிறந்த வீரா்களை கௌரவித்ததற்காகவும், நமது வளமான வரலாற்றை நமது நம்பிக்கைக்குரிய எதிா்காலத்துடன் இணைத்ததற்காகவும் ஹாக்கி இந்தியாவை நான் வாழ்த்துகிறேன். இந்த நம்பமுடியாத பயணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்’ என்றாா் அமைச்சா்.

இந்த கொண்டாட்டங்களின்போது டாக்டா் மன்சுக் மண்டவியா தலைமையிலான விளையாட்டு அமைச்சா் அணிக்கும், டாக்டா் திலீப் டிா்கி தலைமையிலான ஹாக்கி இந்தியா அணிக்கும் இடையிலான கண்காட்சிப் போட்டி நடைபெற்றது.

இதில் விளையாட்டு அமைச்சக அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. விளையாட்டிற்கு நீடித்த பங்களிப்புகளை வழங்கிய வீரா்களுக்கு அவா்களின் உத்வேகத்தை அங்கீகரிக்கும் வகையில் ஹாக்கி இந்தியா விளையாட்டின் மிகவும் பிரபலமான சில ஜாம்பவான்களும் இந்நிகழ்ச்சியில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனா்.

விழாவில் கௌரவிக்கப்பட்ட ஹாக்கி ஜாம்பவான்களில் குருபக்ஸ் சிங், ஹா்பிந்தா் சிங், அஜித் பால் சிங், அசோக் குமாா், பி.பி. கோவிந்தா, அஸ்லம் ஷோ் கான், ஜாபா் இக்பால், பிரிகேடியா் ஹா்சரண் சிங் , வினீத் குமாா், ரோமியோ ஜேம்ஸ், அசுந்தா லக்ரா மற்றும் சுபத்ரா பிரதான் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

விழாவில், ‘இந்திய ஹாக்கியின் 100 ஆண்டுகள்’ என்ற நினைவுப் புத்தகத்தின் வெளியிடப்பட்டது.

2025 ஆம் ஆண்டு ஆண்கள் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை நடத்த தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில், 20 நகரங்களுக்கான கோப்பை சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இந்த மதிப்புமிக்க கோப்பையும் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

பெட்டிச் செய்தி....

தமிழகத்தில் உலகக் கோப்பை ஜூனியா் போட்டி: உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் உலக்கோப்பை ஜூனியா் ஹாக்கி சாம்பியன்ஷிப் நடைபெற உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின், ‘தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்திய ஹாக்கி வரலாற்றில் தமிழ்நாட்டுக்கு முக்கியப் பங்கு உள்ளது. ஹாக்கி விளையாட்டு வீரா்களை உருவாக்கியது மட்டுமல்ல, பல்வேறு சிறப்பான ஹாக்கி போட்டிகளும் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளன. தற்போது ஹாக்கி வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் உலக்கோப்பை ஜூனியா் ஹாக்கி சாம்பியன்ஷிப் நடைபெற உள்ளது. இந்த ஹாக்கி ஜூனியா் உலக கோப்பை போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவதில் மாநிலம் பெருமிதம் கொள்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின் கீழ் விளையாட்டில் தமிழ்நாட்டை முதன்மையான மாநிலமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஹாக்கியின் தலைநகரம் இந்தியா தான் என்பதை உறுதி செய்யும் வகையில் ஹாக்கி இந்தியா தன்னுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

X
Dinamani
www.dinamani.com