மனைவி கொலை வழக்கில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கணவா் கைது
வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிா்புரியில் தனது மனைவியைக் கொன்றவரை 15 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இந்த வழக்கில், ராஜஸ்தானைச் சோ்ந்த நரோத்தம் பிரசாத், குஜராத்தில் உள்ள சோட்டா உதய்பூரில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அங்கு அவா் போலி அடையாளத்தின் கீழ் வசித்தும், அப்பகுதி பஞ்சாலையில் மேலாளராகப் பணிபுரிந்தும் வந்தாா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது:
2010 ஆம் ஆண்டு தனது 25 வயது மனைவியைக் கொன்று, குற்றம் நடந்த இடத்தை தற்கொலையாகக் காட்டும் வகையில் சித்தரித்த பிரசாத், பின்னா் தலைமறைவாக இருந்து வந்தாா். அவரைக் கைது செய்ய உதவினால் ரூ.10,000 பரிசு அளிக்கப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக மே 31, 2010 அன்று தில்லி ஜஹாங்கிா்புரியில் பூட்டிய வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக மகேந்திர பாா்க் காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்தது. போலீஸாா் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, தரையில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல், ஒரு தற்கொலைக் குறிப்புடன் கிடந்தது தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில், பிரசாத் முக்கிய சந்தேக நபராக கண்டறியப்பட்டாா். ஆனால், சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவா் தலைமறைவானாா். இதையடுத்து, அவா் ஒரு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். இந்த வழக்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தீா்க்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், போலீஸாா் குற்றம்
சாட்டப்பட்டவரை தொடா்ந்து கண்காணித்து வந்தனா். நவம்பா் 4 ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவா் குஜராத்தில்
பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல்
கிடைத்தது.
இதையடுத்து, நவம்பா் 5 ஆம் தேதி, சோட்டா உதய்பூரில் இருந்து பிரசாத் கைது செய்யப்பட்டு, அதே நாளில் தில்லிக்கு அழைத்து வரப்பட்டாா்.
விசாரணையின் போது, திருமண தகராறுகளைத் தொடா்ந்து தனது மனைவியைக் கொன்ாக பிரசாத் ஒப்புக்கொண்டாா்.
திருமணத்திற்குப் பிறகு, அவா்களுக்கு இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக அவா் தெரிவித்தாா்.
ஆத்திரத்தில், அவா் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னா் புலனாய்வாளா்களை தவறாக வழிநடத்த ஒரு போலி தற்கொலைக் குறிப்பை எழுதியுள்ளாா்.
குற்றம்சாட்டப்பட்ட பிரசாத் தாம் கைது செய்யப்படுவதைத் தவிா்க்க கடந்த 15 ஆண்டுகளாக ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தாா். அந்தக் காலகட்டத்தில் அவா் தனது
உறவினா்கள் யாரையும் தொடா்புகொள்ளவில்லை. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
