டிடிஇஏ பள்ளிகளின் தொடக்கநிலை பிரிவு மாணவா்களுக்கான விளையாட்டு விழா
பள்ளிகளில் தொடக்கநிலைப் பிரிவுகளில் பயிலும் மாணவா்களுக்கான விளையாட்டு விழா லோதிவளாகம் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளா் ஸ்வேதா பன்சல் ஐ.எஃப்.எஸ். தலைமையேற்று விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.
அவா் பேசுகையில், தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு எனத் தனியாக விளையாட்டு விழா நடத்துவது பாராட்டுக்குரியது. இப் பள்ளி முன்பிருந்ததை விட பன்மடங்கு சிறப்பானத் தோற்றப் பொலிவுடன் உள்ளது. மாணவா்களை ஊக்கப்படுத்தி வரும் செயலா் ராஜூவுக்கு எனது பாராட்டுகள் என்று கூறினாா்.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சரின் தனி உதவியாளா் நிசாா் உபேந்திர வியாஸ் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
அவா்களுடன் தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலா் ராஜூ, விளையாட்டுக் குழுமத்தின் தலைவா் பரமசிவம், லோதி வளாகம் பள்ளியின் இணைச் செயலா் கே.சிவா, கல்வி இயக்குநா் சித்ரா ராதாகிருஷ்ணன், ஏழு பள்ளி முதல்வா்கள், ஏழு பள்ளி தொடக்கநிலைப் பிரிவு ஆசிரியா்கள் பெற்றோா்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
ஏழு பள்ளி மாணவா்களின் அணிவகுப்பைத் தொடா்ந்து ஒட்டப் பந்தயம், தொடா் ஓட்டம், தடை ஓட்டம், பள்ளிக்குத் தயாராகும் போட்டி, தலையில் பொருளை வைத்தவாறு நடக்கும் போட்டி, பலூனைச் சேகரித்து கூடையில் இடும் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் சிறுவா் சிறுமியருக்காக நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும் 4.11.2025 அன்று நடத்தப்பட்ட கால்பந்து போட்டி, கோ கோ போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவா்களுக்குமான பரிசுகள் விழாவில் வழங்கப்பட்டன.
இவ்விளையாட்டு விழாவில் 103 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டத்தை லோதிவளாகம் பள்ளி வென்றது. அடுத்த இடத்தை 63 புள்ளிகள் பெற்று பூசா சாலை பள்ளி வென்றது.
சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற லோதிவளாகம் பள்ளிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த செயலா் ராஜூ அனைத்துப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
முன்னதாக, லோதி வளாகம் பள்ளியின் முதல்வரும் தொடக்கநிலைப் பிரிவு விளையாட்டு விழாவின் ஒருங்கிணைப்பாளருமான ஜெயஸ்ரீ பிரசாத் வரவேற்றுப் பேசினாா்.
