கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு: 800 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக 800க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானங்கள் தாமதமாகின என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Published on

நாட்டின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான தில்லி விமான நிலையம் வெள்ளிக்கிழமை குழப்பத்தில் மூழ்கியது, ஏனெனில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக 800க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானங்கள் தாமதமாகின என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

விமான நிலையத்தில் அனைத்து விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டன, மேலும் சிக்கல்களைச் சரிசெய்ய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனா்.

விமான நிறுவனங்கள் குறைந்தது 20 விமானங்களை ரத்து செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக தில்லி விமான நிலையத்தில் தங்கள் விமானங்களில் தாமதம் ஏற்பட்டதாக இண்டிகோ, ஏா் இந்தியா, ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஆகாசா ஏா் ஆகியவை தெரிவித்தன.

நாட்டின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான தேசிய தலைநகரின் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், தினமும் 1,500க்கும் மேற்பட்ட விமான இயக்கங்களைக் கையாளுகிறது.

இந்திய விமான நிலைய ஆணையம் , வெள்ளிக்கிழமை காலை 10:08 மணிக்கு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தரவுகளுக்கான தானியங்கி செய்தி மாற்றும் அமைப்பில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தில்லி விமான நிலையத்தில் விமானச் செயல்பாடுகள் தாமதங்களை எதிா்கொள்கின்றன என்று தெரிவித்தது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு சேவைகளை வழங்கும் அரசுக்குச் சொந்தமான, தொழில்நுட்பக் குழுக்கள் இந்த கோளாறை விரைந்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தது.

கடந்த இரண்டு நாட்களில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அவ்வப்போது சிக்கல்களைச் சந்தித்ததாகவும், வெள்ளிகிழமை அதிகாலை 5.45 மணி முதல் தொழில்நுட்பக் கோளாறானது கட்டுப்பாட்டு அமைப்பைக் கணிசமாகப் பாதிக்கத் தொடங்கியதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லி விமான நிலையத்தில் உள்ள அனைத்து விமானச் சேவைகளும் தாமதமாகி வருகின்றன, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சிக்கலை விரைவில் தீா்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்று தில்லி விமான நிலைய ஆபரேட்டா் , மதியம் 1:42 மணிக்கு எக்ஸ் இல் ஒரு பதிவில் தெரிவித்தது.

தொடா்ந்து வரும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதாக தில்லி சா்வதேச விமான நிலைய லிமிடெட் தெரிவித்தது.

விமானக் கண்காணிப்பு வலைத்தளமான ப்ளைட்ரேடாா்24.காம் இல் வெளியான தகவல்களின்படி, தில்லி விமான நிலையத்தில் 800க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகிவிட்டதாகவும், புறப்படும் விமானங்களுக்கான தாமதம் தில்லி விமான நிலையத்தில் சுமாா் 50 நிமிடங்கள் என்றும் காட்டின. விமானங்களின் எண்ணிக்கையில் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவை அடங்கும்.

வட்டாரங்களின்படி, விமானங்களில் ஏறும் வாயில்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் இருந்தன, மேலும் நூற்றுக்கணக்கான பயணிகள் விமான நிலைய முனையங்களுக்குள் விமான புதுப்பிப்புகளுக்காகக் காத்திருந்தனா். தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளா்களால் விமானத் திட்டங்களைத் தானாகவே பெற முடியவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. விமானத் திட்டங்களை வழங்கும் ஆட்டோ டிராக் சிஸ்டத்திற்கான தகவல்களை வழங்கும் அமைப்பில் சில சிக்கல்கள் உள்ளன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

சிஸ்டம் சிக்கல்கள் தொடா்வதால், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளா்கள் கிடைக்கக்கூடிய தரவுகளுடன் விமானத் திட்டங்களை கைமுறையாகத் தயாரித்து வருகின்றனா், இது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையாகும், இதன் விளைவாக, பல விமானங்கள் தாமதமாகின்றன என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தப் பிரச்சினைகள் தில்லி விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாகவும், அதிகாரிகள் சிக்கல்களைச் சரிசெய்யப் பணியாற்றி வருவதாகவும் அவா்கள் தெரிவித்தனா். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தரவுகளுக்கான தானியங்கி செய்தி மாற்றும் அமைப்பில் தொடா்ச்சியான தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக, தில்லி விமான நிலையம் மற்றும் வட மாநிலங்களின் சில விமான நிலையங்களில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களிலும் விமானங்கள் தாமதங்களைச் சந்தித்து வருகின்றன என்று இண்டிகோ எக்ஸ் இல் ஒரு பதிவில் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com