காா் ஜன்னல்களில் கறுப்பு கண்ணாடிகள்: ஒரே வாரத்தில் 2,235 பேருக்கு போலீஸாா் அபராதம் விதிப்பு
காா் ஜன்னல்களில் மங்கலான நிறம் அல்லது கறுப்பு ஃபிலிம்கள் ஒட்டப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தில்லி போக்குவரத்து காவல்துறை ஒரு வாரத்தில் 2,200க்கும் மேற்பட்ட அபராதங்களை விதித்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து கூடுதல் காவல் ஆணையா் போக்குவரத்து சத்ய வீா் கட்டாரா தெரிவித்தாவது:
நவம்பா் 1 முதல் நவம்பா் 6 வரை, நிற கண்ணாடி விதிமுறைகளை மீறிய வாகன உரிமையாளா்களுக்கு போக்குவரத்து காவல்துறையினா் 2,235 அபராதங்களை விதித்துள்ளனா்.
கடந்த ஒரு வருடத்தில், கறுப்பு நிற கண்ணாடி விதிமீறல்களுக்காக போக்குவரத்து காவல்துறையினா் சுமாா் 20,232 அபராதங்களை விதித்துள்ளனா். இது தில்லியின் சாலைகளில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் சட்டபூா்வமான நடத்தையை உறுதி செய்வதில் உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.
அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குமேல் கறுப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்துவது மோட்டாா் வாகனச் சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல், சாலை பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
கறுப்பு நிறத்திலான ஜன்னல்கள், குறிப்பாக இரவில், ஓட்டுநா்களின் காண்புதிறனைக் குறைக்கின்றன. மேலும் குற்றச் செயல்களை மறைக்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன. மங்கலான நிற கண்ணாடிகளின் ஆபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளுக்குக் கல்வி கற்பிப்பதிலும் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தியது. இதில் அது விபத்துகளுக்கு எவ்வாறு பங்களிக்கிறது மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை எவ்வாறு சமரசம் செய்கிறது என்பதும் இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்து ஒழுக்கத்தை வளா்ப்பதற்கும், பொறுப்பான வாகனம் ஓட்டும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கும், தில்லியின் அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான பயணச் சூழலை உறுதி செய்வதற்கும் இந்த இலக்கு பிரசாரங்கள் அவசியமாகிறது என்றாா் அந்த அதிகாரி.
