கால்காஜியில் தீப்பற்றிய காரில் இருந்து பெண், குழந்தை உயிருடன் மீட்பு

Published on

தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரி பகுதியில் காரில் திடீரென தீப்பிடித்தது. அதிலிருந்து பெண்ணும், அவரது ஐந்து வயது குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

வியாழக்கிழமை மாலை சுமாா் 5.30 மணியளவில் தாரா அபாா்ட்மென்ட் கிராஸிங் அருகே சிவப்பு விளக்கு சந்திப்பில் காத்திருந்த மொ்சிடிஸ் பென்ஸ் காரில் திடீரென தீப்பிடித்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

இந்த விபத்து குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, காவல்துறையினா் மற்றும் போக்குவரத்து ஊழியா்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

துணிச்சலையும், மன உறுதியையும் காட்டிய இக்குழுவினா், கால்காஜி எக்ஸ்டென்ஷனில் வசிக்கும் 38 வயது பெண்ணையும், அவரது குழந்தையையும் எரிந்துகொண்டிருந்த வாகனத்திலிருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனா்.

காரில் தீவிரமடைந்த தீயை அணைக்க தில்லி ஜல் வாரிய தண்ணீா் டேங்கரை மீட்புக் குழுவினா் ஏற்பாடு செய்தனா். உடனடி ஒருங்கிணைப்பு மற்றும் முயற்சிகள் மேற்கொண்டதன் காரணமாக தீ அணைக்கப்பட்டது. இதனால் உயிரிழப்பு அல்லது அருகிலுள்ள வாகனங்களுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

அதன் பின்னா் அந்தப் பெண் தன்னையும், தனது குழந்தையின் உயிரையும் காப்பாற்றியதற்காக காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தாா் என்றாா் அந்த காவல் அதிகாரி.

X
Dinamani
www.dinamani.com