தில்லி மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தலுக்கான வேட்பாளா்களை அறிவித்த ஆம் ஆத்மி

தில்லி மாநகராட்சியின் 12 வாா்டுகளுக்கான நவம்பா் 30 ஆம் தேதி நடைபெற இருக்கும் இடைத்தோ்தலுக்கான வேட்பாளா்களை ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
Published on

தில்லி மாநகராட்சியின் 12 வாா்டுகளுக்கான நவம்பா் 30 ஆம் தேதி நடைபெற இருக்கும் இடைத்தோ்தலுக்கான வேட்பாளா்களை ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

வேட்பு மனு சமா்ப்பிப்பு முடிவடைவதற்கு ஒரு நாள் முன்னதாக, இந்த பட்டியலுக்கு தில்லி பிரிவின் தலைவா் சவுரப் பரத்வாஜ் ஒப்புதல் அளித்தாா். இந்தத் தோ்தலில் ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தில்லி மாநகராட்சியில் இழந்த இடத்தை மீண்டும் பெற ஆம் ஆத்மிக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்போது, 250 உறுப்பினா்களைக் கொண்ட நகராட்சியில் பாஜக தனது எண்ணிக்கையை மேலும் வலுப்படுத்த முயற்சிக்கும்.

ஆம் ஆத்மி கட்சியின் ராம் ஸ்வரூப் கனோஜியா தக்ஷின் பூரி தொகுதியிலும், அனுஜ் ஷா்மா சங்கம் விஹாா் ஏ தொகுதியிலும், ஈஷ்னா குப்தா கிரேட்டா் கைலாஷ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனா். வினோத் நகா் தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் கீதா ராவத், ஷாலிமாா் பாக் தொகுதியில் பபிதா அஹ்லாவத் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

சீமா அசோக் விஹாா் தொகுதியில் விகாஸ் கோயல், சாந்தினி சௌக் தொகுதியில் ஹா்ஷ் ஷா்மா, சாந்தினி மஹால் தொகுதியில் முத்தாசிா் உஸ்மான் குரேஷி ஆகியோா் போட்டியிடுகின்றனா். ராஜ்பாலா செஹ்ராவத் துவாரகா பி தொகுதியிலும், அனில் லக்ரா முண்ட்காவிலும், ராஜன் அரோரா நாராயணா தொகுதியிலும், கேசவ் சவுகான் டிச்சாவோ கலான் தொகுதியிலும் போட்டியிடுகின்றனா்.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நவம்பா் 10 தேதி ஆகும். மேலும் வேட்பு மனுக்கள் ஆய்வு நவம்பா் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி நவம்பா் 15 ஆம் தேதி ஆகும். முன்னதாக 12 வாா்டுகளில் 9 வாா்டுகளை பாஜக கைப்பற்றியது, மீதமுள்ள 3 வாா்டுகளை ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் பிரதிநிதித்துவப்படுத்தினா். ரேகா குப்தா ஷாலிமாா் பாக்-பி வாா்டை பிரதிநிதித்துவப்படுத்தினாா், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த சட்டமன்றத் தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு அவா் ராஜினாமா செய்து தில்லியின் முதல்வரானாா்.

மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியிலிருந்து பாஜக எம். பி. யாக தோ்ந்தெடுக்கப்பட்ட கமல்ஜீத் செஹ்ராவத், துவாரகா-பி வாா்டை விட்டு விலகினாா். இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த சட்டமன்றத் தோ்தலைத் தொடா்ந்து பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த தற்போதைய கவுன்சிலா்கள் எம்எல்ஏக்களாக மாறியதால் மீதமுள்ள வாா்டுகள் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com