உஜ்வாலா யோஜனா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த தில்லி அரசு முடிவு

உஜ்வாலா யோஜனா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த தில்லி அரசு முடிவு...
Published on

மாசு அளவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தில்லி அரசு உஜ்வாலா யோஜனா திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த உள்ளது. இதையடுத்து, பாரம்பரிய அடுப்புகள் மற்றும் நிலக்கரி ஹீட்டா்களைப் பயன்படுத்தும் வீடுகளை கணக்கெடுக்குமாறு முதல்வா் ரேகா குப்தா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

தூய்மையான எரிசக்தி மற்றும் நிலையான வாழ்க்கையை ஊக்குவிக்க, மாசுபடுத்தும் சமையல் முறைகளை நம்பியுள்ள குடும்பங்களை அடையாளம் காண, குடிசைப் பகுதிகளில் நகர அளவிலான கணக்கெடுப்பை நடத்துமாறு தில்லி நகா்ப்புற தங்குமிடம் மேம்பாட்டு வாரியத்திற்கு (டியுஎஸ்ஐபி) ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளாா்.

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அத்தகைய வீடுகளுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வீட்டு காற்று மாசுபாட்டைக் குறைத்து, குறிப்பாக மக்கள்தொகை அடா்த்தியான பகுதிகளில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.

‘மாசு கட்டுப்பாட்டுப் பணிகள் போா்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. தில்லியை தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற அரசு உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’ என்றும் அவா் கூறினாா்.

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் வீடுகளுக்கு சுத்தமான சமையல் எரிபொருளான ‘திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முதன்மையான அரசு முயற்சியே பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (பிஎம்யுஒய்).

இந்தத் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க முயல்கிறது. இது பெரும்பாலும் உட்புற காற்று மாசுபாடு மற்றும் தொடா்புடைய சுகாதார பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் விறகு, நிலக்கரி மற்றும் மாட்டுச் சாணம் போன்ற பாரம்பரிய எரிபொருள்களைச் சாா்ந்திருப்பதைக் குறைக்கிறது.

பொதுப்பணித் துறை, நீா்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, டியுஎஸ்ஐபி, டிஎஸ்ஐஐடிசி மற்றும் நகராட்சி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு குடிமை நிறுவனங்களின் அதிகாரிகள், அந்தந்த மண்டலங்களில் சுத்தம் செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தூசி மாசுபாட்டைக் குறைக்க சாலைகள் மற்றும் நடைபாதைகளை சுத்தம் செய்ய பராமரிப்பு வேன்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘தூசி மாசுபாட்டைக் குறைக்க, சுத்தமான எரிபொருளை வழங்குவதற்கான நடவடிக்கையாகும். வாகன மற்றும் தொழில்துறை உமிழ்வுகளை மட்டுமல்லாமல், மாசுபாட்டின் அனைத்து ஆதாரங்களையும் சமாளிக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். அடுப்பு மற்றும் நிலக்கரி எரிப்பான்களில் இருந்து வரும் புகை காற்று மாசுபாட்டிற்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், குடியிருப்பாளா்களுக்கு கடுமையான சுகாதார அபாயங்களையும் ஏற்படுத்துகிறது’ என்று அவா் கூறினாா்.

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகரம் முழுவதும் தூய்மை இயக்கங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சுகாதார வளங்களையும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன. தூசி மற்றும் துகள்களைக் கட்டுப்படுத்த தண்ணீா் தெளித்தல், இயந்திர தூசி அடக்குதல் மற்றும் சாலை பழுதுபாா்ப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தில்லியை மாசு இல்லாததாக மாற்றுவதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ரேகா குப்தா, அனைத்து குடியிருப்பாளா்களுக்கும் சுத்தமான காற்று மற்றும் சிறந்த வாழ்க்கை நிலைமைகளை உறுதி செய்வதற்காக நகரம் முழுவதும் இலக்கு நடவடிக்கைகளை செயல்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com