கிழக்கு தில்லி இரட்டை கத்துகுத்து வழக்கு: 4 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது
கிழக்கு தில்லியின் மண்டாவளி மற்றும் மது விஹாா் பகுதிகளில் இருந்து தொடா்புடைய இரண்டு கத்தி குத்து தாக்குதல் சம்பவங்களில் தொடா்புடையதாக கூறப்படும் 5 சிறுவா்கள் உள்பட 7 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவங்கள் முக்கிய சதிகாரரான சுஹைல் மற்றும் அவரது கூட்டாளிகளால் தங்கள் போட்டிக் குழுவிக்கு எதிராக திட்டமிடப்பட்ட பழிவாங்கும் தாக்குதலின் ஒரு பகுதியாகும். குற்றம் சாட்டப்பட்டவா்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள பிஜ்னோா் நகருக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனா்.
முதல் கத்திக்குத்து சம்பவம் நவம்பா் 8 ஆம் தேதி இரவு 10.56 மணிக்கு மண்டாவலியில் உள்ள தலாப் சவுக்கில் இருந்து பதிவாகியுள்ளது. அங்கு ஐந்து அல்லது ஆறு போ் கிருஷ்ணா என்ற கிசு மற்றும் அவரது நண்பா் மோஹித் ஆகியோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணாவின் இடது தொடையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
அதன்பிறகு, இரவு 11.15 மணியளவில், எல். பி. எஸ் மருத்துவமனையில் இருந்து மது விஹாா் காவல் நிலையத்திற்கு மற்றொரு கத்திக்குத்து சம்பவம் பதிவாகியுள்ளது. அங்கு யாஷ் என்ற பம்மா, அவரது மாா்பின் வலது பக்கத்தில் பல கத்திக்குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்டாா். முதல்கட்ட விசாரணையில் இரண்டு தாக்குதல்களும் ஒரே தாக்குதல் குழுவால் தொடா்புபடுத்தப்பட்டு நடத்தப்பட்டவை என்பது தெரியவந்தது.
அதன்படி, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க மூன்று போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன.
சிசிடிவி காட்சிகள், உள்ளூா் உளவுத்துறை மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி போலீஸ் குழுக்கள் குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கின. மண்டவாலியில் உள்ள மஜ்பூா் முகாமில் பல சோதனைகள் நடத்தப்பட்டன, ஆனால் சந்தேகத்திற்குரியவா்கள் ஆரம்பத்தில் தப்பியோடியது கண்டறியப்பட்டது.
குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், குழுக்கள் நவம்பா் 9 ஆம் தேதி காஜியாபாத்தில் உள்ள அா்த்தலாவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தி, சிறுவா்கள் உட்பட குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரையும் பிஜ்னூருக்கு பேருந்தில் ஏறத் தயாராகிக் கொண்டிருந்தபோது கைது செய்தன.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் மண்டாவலி பகுதியில் வசிக்கும் சுஹைல் (19), யூசுப் (19) மற்றும் ரிஸ்வான் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். கைது செய்யப்பட்ட மற்றவா்கள் சிறுவா்கள் ஆவா். தாக்குதல்களின் பின்னணியில் உள்ள நோக்கம் பழிவாங்கும் நடவடிக்கையாக இருந்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் தங்கள் போட்டியாளரான மோஹித்தின் கூட்டாளிகளை குறிவைத்துள்ளனா். குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் பங்கையும் சரிபாா்க்கவும், கூடுதல் சதிகாரா்களை அடையாளம் காணவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
