நரேலா தொழிற்சாலையில் தீ விபத்து
தில்லியின் நரேலா தொழில்துறை பகுதியில் உள்ள மின் கேபிள் உற்பத்தி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை காலை 10.40 மணியளவில் நரேலாவில் ஒரு வணிக வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இருந்து இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்து கட்டடத்தின் முதல் தளத்தையும் இரண்டாவது மாடியில் உள்ள தகரக் கொட்டகையையும் சூழ்ந்தது. பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பிவைக்கப்பட்டன.
அங்கு தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். மதியம் 12.20 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
