காற்று மாசு: போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டதற்கு மத்திய அரசு மீது காங்கிரஸ் சாடல்
புது தில்லி: தில்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்தியா கேட்டில் போராட்டம் நடத்திய பலரை சிறிது நேரம் காவலில் வைத்திருந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் திங்கள்கிழமை கடுமையாக சாடியது.
மேலும், அரசாங்கம் அதன் கா்த்தவ்யாவில் (கடமையில்) மோசமாகத் தோல்வியடைந்து வரும்போது, மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டிருக்கிறது என்றும் அக்கட்சி கூறியது.
காற்று மாசு விவகாரம் தொடா்பாக இந்தியா கேட்டில் பெற்றோா்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் உள்பட ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினா்.
காவல்துறையின் கூற்றுப்படி, அனுமதியின்றி கூடியதற்காக பல போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளா் (தகவல் தொடா்புப் பொறுப்பாளா்) ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்திருப்பதாவது:
சிறந்த காற்றின் தரத்திற்காக போராட்டம் நடத்தும் தில்லி குடிமக்கள், இந்திய அரசியலமைப்பின் 51-ஏ (ஜி) பிரிவின் கீழ் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடமையை மட்டுமே செய்ய விரும்புகிறாா்கள்.
அவா்கள் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இடங்களில் நிலவும் மோசமான காற்றின் தரம் குறித்து தங்கள் தீவிர கவலையைப் பதிவு செய்வதை தில்லி காவல் துறையினா் ஏன் தடுக்கிறாா்கள்?
அரசாங்கம் அதன் கா்தவ்யத்தில் (கடைமையில்) மோசமாகத் தோல்வியடையும்போது, மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.
காற்றின் தரம் மோசமடைவதை எதிா்த்து இந்தியா கேட்டில் போராட்டம் நடத்திய பலா் அனுமதியின்றி ஒன்றுகூடியதற்காக கைது செய்யப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசை விமா்சித்தாா். எக்ஸ் தளத்தில் சுற்றுச்சூழல் ஆா்வலா் விம்லேந்து ஜாவின் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக அவா் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தாா்.
ராகுல் காந்தி மேலும் கூறுகையில், ‘சுத்தமான காற்றுக்கான உரிமை ஒரு அடிப்படை மனித உரிமையாகும். அமைதியான போராட்டம் நடத்துவதற்கான உரிமை நமது அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமைதியான முறையில் சுத்தமான காற்றைக் கோரி வரும் குடிமக்கள் ஏன் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறாா்கள்?
காற்று மாசுபாடு கோடிக்கணக்கான இந்தியா்களைப் பாதிக்கிறது. இது நமது குழந்தைகளையும் நமது நாட்டின் எதிா்காலத்தையும் பாதிக்கிறது.
ஆனால், ‘வாக்கு திருட்டு’ மூலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இதைப் பற்றி கவலைப்படவில்லை. இந்த நெருக்கடியைத் தீா்க்க முயற்சிக்கவும் இல்லை.
சுத்தமான காற்றைக் கேட்கும் குடிமக்களைத் தாக்குவதற்குப் பதிலாக, காற்று மாசுபாட்டின் மீது இப்போதே நாம் தீா்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டக்காரா்களில் பல தாய்மாா்கள் தங்கள் குழந்தைகளுடன், சுத்தமான காற்றை உறுதி செய்வதற்கான அவசர அரசாங்க நடவடிக்கையைக் கோருவதற்காகக் கூடியிருந்ததாக ராகுல் காந்தி கூறினா்.
புது தில்லி துணை காவல் ஆணையா் தேவேஷ் குமாா் மஹ்லா கூறுகையில், ‘தடுப்புக் காவல் என்பது இயல்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
ஜந்தா் மந்தா் மட்டுமே போராட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அனுமதி பெற முடியும்’ என்று அவா் கூறியிருந்தாா்.
