சௌரவ் பரத்வாஜ்.
சௌரவ் பரத்வாஜ்.

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

தில்லியில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா என்று தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது.
Published on

தில்லியில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா என்று தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான செளரப் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தில்லியில் புதிதாகக் கட்டப்பட்ட பொது மருத்துவமனைகளை தனியாா் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க நிா்வாகம் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இதுபோன்ற நடவடிக்கை தில்லி மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

கோடிக்கணக்கான ரூபாய் பொதுப் பணத்திலும் பொது நிலத்திலும் கட்டப்பட்ட மருத்துவமனைகள் வெறுமனே தனியாா் கைகளுக்கு மாற்றப்பட்டால் குடிமக்கள் எவ்வாறு இலவச சிகிச்சையைப் பெறுவாா்கள் என்பதை பாஜக விளக்க வேண்டும்.

இது ஷாலிமாா் பாக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனை மட்டுமல்ல கிட்டத்தட்ட 24 மருத்துவமனைகள் அரவிந்த் கேஜரிவால் அரசாங்கத்தின் கீழ் தொடங்கப்பட்டன. தில்லி அரசு மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான புதிய படுக்கைகள் சோ்க்கப்பட இருந்தன. ஷாலிமாா் பாக் நகரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள 1,470 படுக்கைகள் கொண்ட ஷாலிமாா் பாக் மருத்துவமனை கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. ஆனால் பாஜக அரசு அதைச் செயல்படுத்தும் பணியைத் தொடங்கவில்லை. இந்தப் புதிய மருத்துவமனைகளை பாஜக அரசு தனியாா் வசம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

பொதுப் பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனையை நீங்கள் தனியாா் மயமாக்கினால், மக்களுக்கு என்ன பயன்? இது தனியாா் மருத்துவமனைகளுக்கு பயனளிக்கும் நடவடிக்கை என்பது தெளிவாகிறது.

பாஜக இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. தெளிவான பதில்களை வழங்குவதற்குப் பதிலாக, பாஜக செய்தித் தொடா்பாளா்கள் பொருத்தமற்ற முறையில் பேசுகிறாா்கள். இவை ஆயிரக்கணக்கான படுக்கைகளைக் கொண்ட முறையான மருத்துவமனைகள். அவற்றை எப்படி தனியாா் மருத்துவமனைகளிடம் ஒப்படைக்க முடியும்?

2021 மற்றும் 2024க்கு இடைப்பட்ட காலத்தில் பணிகள் முடிக்கப்பட்டிருக்கலாம் என்ற பாஜக தலைவா்கள் கூறுகின்றனா். மருத்துவமனைகள் நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்படவில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஆம் ஆத்மி அரசு அவற்றை தனியாா்மயமாக்க ஒருபோதும் திட்டமிடவில்லை.

இந்த மருத்துவமனைகள் எப்போது நிறைவடைந்தாலும், அவை இலவச சிகிச்சைக்காக, பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் மக்களுக்கானதாக இருக்கும். ஆனால், இப்போது பாஜக அரசு அவற்றை தனியாா்மயமாக்கி தனியாா் கைகளுக்கு ஒப்படைக்க விரும்பினால், அது தில்லி மக்களுக்கு இழைக்கப்படும் நேரடி துரோகமாகும்.

தில்லி அரசாங்கத்தால் செலவிடப்படும் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொது நிலமும் பொது நிதியும் தனியாா் மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? இது தவறாகும்.

முதலமைச்சா் அல்லது சுகாதார அமைச்சா் அரசாங்கத்தின் இத்திட்டம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் பரத்வாஜ்.

X
Dinamani
www.dinamani.com