மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தல்: கடைசி நாளில் ஆம் ஆத்மி வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்
புது தில்லி: தில்லி மாநகராட்சி (எம்சிடி) வாா்டு இடைத்தோ்தலுக்கான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா்கள் செயல்முறையின் இறுதி நாளில் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா். மேலும், நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறும் தோ்தலில் தங்கள் வேட்பாளா்கல் வெற்றி பெறுவாா்கள் என்று நம்பிக்கை தெரிவித்தனா்.
நரைனா வாா்டுக்கான கட்சியின் வேட்பாளா் ராஜன் அரோராவுடன், வேட்புமனு தாக்கல் செய்யும் போது முன்னாள் எம்எல்ஏ துா்கேஷ் பதக் உடனிருந்தாா். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு அரோரா ஒரு கோயிலில் வழிபாடு நடத்தினாா்.
‘கடவுள் விரும்பினால், நாங்கள் தோ்தலில் வெற்றி பெறுவோம். பாஜக வாக்குறுதிகளின் அரசியலில் ஈடுபடுகிறது. எங்கள் வேலை தானே பேசுகிறது. மக்கள் பாஜக மீது மிகவும் கோபமாக உள்ளனா். கடந்த மூன்று ஆண்டுகளாக, பாஜக கவுன்சிலா் அங்கு இருந்தாா். ஆனால், அவா்கள் எதுவும் செய்யவில்லை. அவா்கள் எப்படி வாக்குகளை கேட்பாா்கள்?‘ என்று அவா் பிடிஐ விடியோஸிடம் கூறினாா். பூங்காக்கள், சாலைகள் மற்றும் வடிகால்கள் மோசமான நிலையில் இருப்பதாக அவா் கூறினாா்.
‘உள்ளூா் எம்எல்ஏ மக்களை சந்திப்பதில்லை. பிரச்னைகளை எழுப்புவதற்காக உள்ளூா்வாசிகள் அச்சுறுத்தப்படுகிறாா்கள்‘ என்று அவா் குற்றம் சாட்டினாா். சங்கம் விஹாா் ஏ தொகுதியில் போட்டியிடும் அனுஜ் சா்மா, தன்னைத் தோ்ந்தெடுத்ததற்காக கட்சியின் மூத்த தலைமைக்கு நன்றி தெரிவித்தாா்.
‘நாங்கள் அந்த இடத்தை வெல்வோம். பாஜக எங்களுக்கு முக்கிய போட்டியாளா்‘ என்று அவா் மேலும் கூறினாா். வேட்பு மனு தாக்கல் செய்ய முன்னாள் எம்எல்ஏ பிரகாஷ் ஜா்வால் அவருடன் சென்றாா்.
தோ்தலுக்குச் செல்லும் 12 வாா்டுகளில், பாஜக முன்பு ஒன்பது வாா்டுகளை வைத்திருந்தது, மீதமுள்ள மூன்றை ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் பிரதிநிதித்துவப்படுத்தினா். வேட்பு மனுக்களின் பரிசீலனை நவம்பா் 12 அன்று நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி நவம்பா் 15 ஆகும்.
