தலைநகா் தில்லியில் பலத்த பாதுகாப்பு!
நமது நிருபா்
புது தில்லி: தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் ஏற்பட்ட காா் வெடிப்பைத் தொடா்ந்து, தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலய (என்சிஆா்) பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பு சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை காா் வெடிப்பு சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் நகா் முழுவதும் வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வரும் ரோந்து மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
குறிப்பாக, நாடாளுமன்றம், இந்தியா கேட், விமான நிலையம், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், எய்ம்ஸ் மருத்துவமனை, தில்லி சட்டப்பேரவை மற்றும் முக்கிய அலுவலகங்கள், பிரதமா், உள்துறை அமைச்சா், தில்லி முதல்வா் உள்பட முக்கியப் பிரமுகா்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காா் வெடிப்பின் தன்மையை அறிய தேசிய பாதுகாப்புப் படையினா் (என்எஸ்ஜி), தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனா். சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் தில்லி காவல்துறைக்கு உதவியாக அவா்கள் ஆய்வில் ஈடுபட்டதாக மத்திய உள்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சம்பவம் நடந்த பகுதியில் காா் வெடிப்பு ஏற்பட்டபோது அதன் சத்தம் செங்கோட்டையைச் சுற்றியுள்ள 2 கிலோ மீட்டா் தூரத்துக்கு கேட்டுள்ளது. இதையடுத்து சுற்றுப்புறங்களில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்கள் பதற்றம் அடைந்தனா்.
மேலும், புது தில்லியில் இருந்து பழைய தில்லி பகுதிகளுக்கு இரண்டு மற்றும் காா் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோரும் பேருந்துகளில் செல்பவா்களும் செங்கோட்டை பகுதி வழியாக செல்வது வழக்கம். செங்கோட்டை எதிரே சாந்தினி செளக் பகுதி அடா்த்தியான சிறுகடைகள் உள்ள பஜாா் பகுதியாகும். இதனால் அந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும்.
இந்நிலையில், காா் வெடிப்பு நடந்த பிறகு அந்த வழியாக போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது. மக்கள் பீதியில் அலறியபடி ஓடினா். இதனால் அப்பகுதியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பலரும் பேருந்துகளில் இருந்து இறங்கி சம்பவ பகுதியை விட்டு ஓடுவதைக் காண முடிந்ததாக நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.
தில்லியை இணைக்கும் உத்தர பிரதேசத்தின் காஜியாபாத், ஹரியாணாவை இணைக்கும் ஃபரீதாபாத் உள்ளிட்ட இடங்களில் வாகன தணிக்கை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தில்லி காவல்துறை உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நகர காவல்துறையின் சிறப்புப்பிரிவு, குற்றப்பிரிவு உள்பட அனைத்து பிரிவுகளும் உஷாா் நிலையில் உள்ளன. தில்லி - ஹரியாணா எல்லைக்கு அருகே வாகனங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

