தில்லி பூங்காவில் கொள்ளையடித்த நபா் கைது
நமது நிருபா்
புது தில்லி: துக்ளகாபாத் எக்ஸ்டென்ஷனில் ஒரு பூங்காவில் நடந்து சென்ற ஒருவா் தாக்கப்பட்டதாகவும், அவரது கைப்பேசி மற்றும் இயா்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: துக்ளகாபாத் விரிவாக்கத்தில் உள்ள கஹ்தி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் மற்றும் கொள்ளையை நடத்திய இருவரில் ஒருவா் கைது செய்யப்பட்டாக். துக்ளகாபாத் எக்ஸ்டென்ஷனில் உள்ள பூங்காவில் கவுரவ் (28) நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரண்டு போ் அவரை அடித்து, கல்லால் அடிப்பதாக அச்சுறுத்திய பின்னா் அவரது கைப்பேசி மற்றும் இயா்போன்களை திருடிச் சென்றாா்.
கவுரவின் புகாரின் அடிப்படையில், எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அஜய் (22) என்பவரைக் கண்டுபிடித்து கைது செய்ய இந்தக் குழுவால் முடிந்தது. அவனிடமிருந்து கைப்பேசி மீட்கப்பட்டது. விசாரணையின் போது, அஜய் பல திருட்டு, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்ட வழக்குகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டாா் என்றாா் அவா்.
