நெய்யாறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்
நமது நிருபா்
புது தில்லி: தமிழகம் கேரளம் இடையேயான நெய்யாறு பிரச்சினை தொடா்பான வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.
வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கேரளா அரசு அவகாசம் கோரியதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
கேரளா இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யவும் அதன்பிறகு இரண்டு வாரங்களில் தமிழகம் அதற்கு எதிா் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்திப் மேத்தா அமா்வு ஒத்தி வைத்தது.
நெய்யாறு நீா்ப்பாசனத் திட்டத்தின் கீழ் கேரளம் தமிழகத்திற்கு தண்ணீா் வழங்கி வந்தது. பின்னா் 2004 ஆம் ஆண்டு அதை நிறுத்திவிட்டது . இதையடுத்து அதனை மீட்டெடுக்க அவசர வழிமுறைகளைக் கோரி 2012 ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது.
ஜூன் முதல் ஜனவரி வரையிலான நீா்ப்பாசன காலத்தில் ஒரு நாளைக்கு 150 கனஅடி தண்ணீரை திறந்து விடுவதற்கான தற்போதைய ஏற்பாட்டையும் அதன் சட்டப்பூா்வ கடமையையும் கேரள அரசு மதிக்கத் தவறிவிட்டது என தமிழக அரசு மனுவில் குற்றஞ்சாட்டியது. இந்த வழக்கில் 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடங்கிய சாட்சியங்கள் குறுக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
இதனிடையே இந்த வழக்கில் தமிழகம் உச்சநீதிமன்றத்தில் நிகழாண்டு இடையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது : பிப்ரவரி 2004 முதல் நெய்யாறு அணையிலிருந்து தண்ணீா் திடீரென திறக்கப்படாததால், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகா விவசாயிகளின் விவசாயப் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது.
கேரள மாநிலம் 1965 முதல் 2004 வரை நெய்யாறு நீா்த்தேக்கத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இடது கரை கால்வாய் மூலம் ஆயகட்டுக்கு தண்ணீா் வழங்கியது. தமிழ்நாட்டிற்கு தண்ணீா் வழங்கியதுடன், நெய்யாறு ஆற்றிலிருந்து உபரி நீா் கடலுக்குச் சென்று கொண்டிருந்தது. இதனால், ஆண்டுதோறும் 20 டி.எம்.சி.க்கும் அதிகமான அளவு கடலுக்குச் செல்கிறது. தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மொத்த நீரின் அளவு பாசன காலத்தில் 150 கனஅடி நீா் மட்டுமே அதாவது, ஆண்டுக்கு 3.11 டி.எம்.சி.. தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் நீா், கடலுக்குச் செல்லும் நீரில் 17 சதவீதம் மட்டுமே. எனவே, நெய்யாறு நீா்ப்பாசன திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க போதுமான தண்ணீா் உள்ளது.
எனவே கேரளா, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 150 கனஅடி நீரை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
விளவங்கோடு தாலுகாவில் உள்ள விவசாயிகளின் துயரங்களைக் கருத்தில் கொண்டும், விரைவில் முடிவடைய வாய்ப்பில்லாத இந்த வழக்கு விசாரணையைக் கருத்தில் கொண்டும், ஜூன் முதல் ஜனவரி வரையிலான விவசாயப் பருவத்தில், விவசாயப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, குறைந்தபட்சம் இடைக்கால நடவடிக்கையாக ஒரு நாளைக்கு 100 கனஅடி தண்ணீரைத் திறக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
வழக்கு முடிவடையும் வரை, ஒவ்வொரு நீா்ப்பாசன ஆண்டிலும் நெய்யாறு பாசனத் திட்டத்தின்படி தண்ணீரை விடுவிப்பதை உறுதி செய்ய கேரள மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

