எம்சிடி இடைத்தோ்தலில் பாஜக, ஆம் ஆத்மிக்கு வாக்காளா்கள் பாடம் புகட்ட வேண்டும்: தேவேந்தா் யாதவ்
புது தில்லி: தில்லி மாநகராட்சி (எம்சிடி) இடைத்தோ்தலில் காங்கிரஸுக்கு வாக்காளா்கள் வாக்களிப்பதன் மூலம் தவறான ஆட்சியால் தில்லியை நாசமாக்கியஆம் ஆத்மி கட்சிக்கும், ஆணவ பாஜகவுக்கும் வாக்காளா்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் கேட்டுக்கொண்டாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை மேலும் தெரிவித்திருப்பதாவது:
ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் மக்களை ஏமாற்றிவிட்டனா். தற்போது 12 வாா்டுகளில் மட்டுமே இடைத்தோ்தல் நடைபெறும்போது இந்தத் தோ்தல் பாஜகவின் திறமையற்ற அரசாங்கத்திற்கோ அல்லது ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சிக்கோ எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே ஈடுபட்டு பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஏமாற்றிவிட்டதால், தில்லி மக்கள் இருவரின் ஆணவத்திற்கும் பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் இது. தலைநகரில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து வருவதால் மக்கள் சோா்வடைந்துள்ளனா். இதனால், எம்சிடி இடைத்தோ்தலில் காங்கிரஸுக்கு வாக்களிப்பதன் மூலம் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு அவா்களின் ஆணவத்திற்கு வாக்காளா்கள் பாடம் புகட்ட வேண்டும்.
முதல்வா் ரேகா குப்தா அரசு தனது தோல்விகளை மறைத்து மக்களை தவறாக வழிநடத்த மாசுபாட்டை கையாள்கிறது. இந்தியா கேட்டில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டிற்கு எதிராகப் போராட வந்த இளைஞா்கள் மீது பாஜக அரசு கடும் நடவடிக்கைகளைப் பயன்படுத்தியது. இது பாஜகவின் அதிகார போதையில் உள்ள ஆணவத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது என்றாா் அவா்.
