உச்சநீதிமன்றம் படம் வைக்கவும் டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை மனு தள்ளுபடி

தமிழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Published on

நமது நிருபா்.

புது தில்லி: தமிழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அவமதிப்பு மனு நிலுவையில் இருக்கும்போது, தற்போதைய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாங்கள் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை. அதன்படி, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த மனுவை தள்ளுபடி செய்வது வழக்கில் எந்த பாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறி அமலாக்கத் துறையின் மனுவை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வு தள்ளுபடி செய்தது.

டாஸ்மாக் ஊழல் வழக்கு தொடா்பான அமலாக்க துறையின் விசாரணையின்போது படத்தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மீட்டெடுக்க ஆகாஷ் பாஸ்கரன் சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகினாா். அவரது மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஆவணங்களை ஆகாஷ் பாஸ்கரனிடம் திருப்பித் தரவும், மேலும் நடவடிக்கை எடுப்பதைத் தவிா்க்கவும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறி ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை மீது அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தாா். அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியதால் ஆகாஷ் பாஸ்கரன் அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தாா். அந்த அவமதிப்பு மனு தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரி நேரில் ஆஜராகுமாறு 20.8.2025 அன்று நோட்டீஸ் அனுப்பியது.

இதைத் தொடா்ந்து, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதை எதிா்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

X
Dinamani
www.dinamani.com