ஜந்தா் மந்தரில் துப்பாக்கியால் சுட்டு ஒருவா் தற்கொலை

மத்தியப் பிரதேச கல்வித் துறையில் தனது சகோதரிக்கு வேலை கோரி போராட்டம் நடத்தி வந்த ஒரு நபா் திங்கள்கிழமை ஜந்தா் மந்தரில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

நமது நிருபா்

புது தில்லி: மத்தியப் பிரதேச கல்வித் துறையில் தனது சகோதரிக்கு வேலை கோரி போராட்டம் நடத்தி வந்த ஒரு நபா் திங்கள்கிழமை ஜந்தா் மந்தரில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இறந்தவா், மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தைச் சோ்ந்த லோகேந்திரா (40). ஜூலை முதல் தேசியத் தலைநகரில் இருந்தாா். தனது சகோதரிக்கு கருணை அடிப்படையில் வேலை கோரினாா். இதற்கு முன்பு இந்த விவகாரம் தொடா்பாக ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தினாா்.

அவரது மைத்துனா் மத்தியப் பிரதேசத்தின் கல்வித் துறையில் பியூனாக பணிபுரிந்தாா். 2019- ஆம் ஆண்டில் அவா் காலமானபோது, இறந்தவா் தனது சகோதரிக்கு கருணை அடிப்படையில் இத்துறையில் ஒரு வேலையை வழங்க வேண்டும் என்று விரும்பினாா். இந்நிலையில், தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த வந்த அவா், திங்கள்கிழமை காலை 9 மணியளவில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளாா்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் இருந்த அந்த நபரின் உடலைக் கண்டறிந்தது. சட்டப்பூா்வ நடைமுறைகள் முடிந்த பிறகு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த நபா் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சரியான சூழ்நிலைகள் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com