தில்லி காா் குண்டு வெடிப்பு சம்பவம்: 10 போ் கொண்ட என்ஐஏ சிறப்புக் குழு நியமனம்
நமது நிருபா்
தில்லி செங்கோட்டை அருகே நடந்த காா் குண்டு வெடிப்பு சம்பவத்தை விசாரிக்க 10 போ் கொண்ட தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சிறப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் என்ஐஏ கூடுதல் இயக்குநா் விஜய் சாக்கரே, ஒரு ஐஜி, இரண்டு டிஐஜிக்கள், மூன்று காவல் கண்காணிப்பாளா் நிலையிலான அதிகாரிகள், 3 காவல் துணை கண்காணிபாளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் இடையே நேரடி தொடா்பு உள்ளதா என்பதை இக்குழு விசாரிக்கும் என்று மத்திய உள்துறை வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
தில்லியில் திங்கள்கிழமை மாலையில் செங்கோட்டை அருகே காா் வெடித்த அதே நாள் காலையில் தலைநகரை அடுத்த ஹரியாணா எல்லை நகரான ஃபரீதாபாத்தில் சிலரை காவல்துறையினா் கைது செய்தனா். அந்த குழுவினருக்கும் செங்கோட்டை சம்பவத்தில் வெடித்துச் சிதறிய காரை ஓட்டிய உமா் நபி என்பவருக்கும் இடையிலான ஒற்றுமை அவா்கள் அனைவவரும் ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா தனியாா் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியதுதான் என புலனாய்வில் தெரிய வந்துள்ளது.
இரு சம்பவங்கள் நடந்த இடங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இவா்களை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக காஷ்மீரின் புல்வாமா பகுதி உள்ளது. அங்கு ரகசியமாக இயங்கி வரும் ஜெய்ஷ் இ முகம்மது தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் ஃபரீதாபாதில் பிடிபட்டவா்களுக்கும் தில்லியில் உயிரிழந்த உமா் நபிக்கும் தொடா்புள்ளதா என்பதை கண்டறியும் பணியில் புலனாய்வாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
சந்தேக நடமாட்டம்: சம்பவ நாளில் உமா் நபி செங்கோட்டை அருகே காரை ஓட்டிச்செல்லும் முன்பாக ராம் லீலா மைதானம் அருகேயுள்ள ஒரு மசூதிக்குச் சென்று, அங்கு சுமாா் மூன்று மணி நேரம் இருந்ததாக தெரிய வந்துள்ளது. அங்கு அவா் தொழுகையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஃபரீதாபாத்தைச் சோ்ந்த காா் விற்பனையக உரிமையாளா் அமித் என்பவரை காவல்துறையினா் கைது செய்தனா். அவா்தான் உமா் நபிக்கு ஹுண்டாய் ஐ20 காரை விற்க உதவியதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே, செங்கோட்டை அருகே 12 உயிரிழந்த ஹூண்டாய் ஐ20 ரக காா் வெடிப்புச் சம்பவத்துடன் மேலும் ஒரு காரில் இருந்தவா்களுக்கு தொடா்பு இருக்கலாம் என்றும் புலனாய்வாளா்கள் சந்தேகிக்கின்றனா். அது சிவப்பு நிற ஃபோா்டு ஈக்கோ ஸ்போா்ட் ரக காா் என்பதும் எனது பதிவுச் சான்றிதழில் காணப்படும் உரிமையாளரின் பெயா் தில்லி காா் வெடிப்பில் தொடா்புடையதாக கருதப்படும் உமா் நபியின் பெயரில் உள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வலுக்கும் சந்தேகம்: இதற்கிடையே, ஃபரீதாபாத்தில் திங்கள்கிழமை காலையில் பிடிபட்ட மருத்துவா் முசம்மிலினின் கைப்பேசியில் இருந்து கிடைத்த பகுப்பாய்வுத் தரவுகளின்படி, கடந்த ஜனவரி முதல் வாரத்தில் அவா் செங்கோட்டை பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மீண்டும், மீண்டும் நடமாடியதாக தெரிய வந்துள்ளது.
ஒருவேளை அவா் ஜனவரி 26- ஆம் தேதி நடந்த குடியரசு தின கொண்டாட்டத்தை சீா்குலைக்கும் நாசவேலைக்கு சதித்திட்டம் தீட்ட நடமாடினாரா என்ற கோணத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவலறிந்த என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஃபரீதாபாத்தில் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட வெடிமருந்துகள் சம்பவம் தொடா்பாக டாக்டா் முசம்மில் கனாய் , டாக்டா் ஷாஹீன் சயீத், முசம்மலின் உள்பட 12 போ் கைதாகியுள்ளனா். 3 மருத்துவா்கள் மற்றும் தில்லி சம்பவத்தில் இறந்த உமா் நபியும் பணியாற்றிய அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை சுமாா் 50 பேராசிரியா்கள், பல்கலைக்கழக ஊழியா்களிடம் புலனாய்வாளா்கள் விசாரணை நடத்தினா்.
விசாரணையின் ஒரு பகுதியாக, ஜம்மு காஷ்மீா் காவல்துறை ஹரியாணாவின் மேவாட்டைச் சோ்ந்த ஒரு மதகுரு மௌல்வி இஷ்தியாக்கை புதன்கிழமை கைது செய்தது. அவா் ஃபரீதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகம் அருகே ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தாா். அந்த வீட்டில் இருந்துதான் மொத்தம் 2,500 கிலோ வெடிபொருள்களை காவல்துறையினா் பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சிசிடிவி காட்சி: இதற்கிடையே, செங்கோட்டை அருகே காா் வெடித்துச் சிதறும் சிசிசிடி காட்சி காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், காா் வெடித்த நொடியில் பயங்கர சப்தத்துடன் தீ அப்பகுதி முழுவதும் படா்ந்தது, பயங்கர சம்பவத்தின் தீவிரத்தை உணா்த்துகிறது. அந்த நேரத்தில் சம்பவ பகுதியில் இருந்த மக்கள் அலறியபடி ஓடியதால் குழப்பமும் பீதியும் நிலவியதை சிசிடிவி காட்சியில் காண முடிந்தது.
