செங்கோட்டை காா் வெடிப்பு ‘ஒரு பயங்கரவாத செயல்’ - மத்திய அமைச்சரவை கண்டனம்!
நமது நிருபா்
தில்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் நடந்த காா் குண்டு வெடிப்பு சம்பவத்தை தேச விரோத சக்திகள் இழைத்த ஒரு பயங்கரவாத செயல் என்று மத்திய அமைச்சரவை குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தை மத்திய அரசு கண்டித்துள்ளது.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை மாலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டு இரண்டு நிமிஷங்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமைச்சா் பேட்டி: இதைத் தொடா்ந்து, இந்தச் சம்பவம் தொடா்பாக ஒன்பது அம்ச தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து பின்னா் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
செங்கோட்டை அருகே 2025 நவம்பா் 10 ஆம் தேதி மாலையில் ஒரு காரை வெடிக்கச் செய்ததன் மூலம், தேசவிரோத சக்திகளால் நடத்தப்பட்ட ஒரு கொடூரமான பயங்கரவாத சம்பவத்தை நாடு சந்தித்தது. இந்த வெடிப்பில் பலா் உயிரிழந்தனா். மேலும் பலா் காயமடைந்தனா்.
உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி: இந்த உணா்ச்சியற்ற வன்முறை செயலால் உயிரிழந்தவா்களுக்கு அமைச்சரவை தனது நெஞ்சாா்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதோடு அவா்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய அமைச்சரவை பிராா்த்தனை செய்கிறது. பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய பராமரிப்பையும் ஆதரவையும் வழங்கி வரும் மருத்துவப் பணியாளா்கள், அவசரகால மீட்புப் பணியாளா்களின் உடனடி முயற்சிகளுக்கு அமைச்சரவை பாராட்டு தெரிவித்தது.
அமைச்சரவை கண்டனம்: அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு வழிவகுத்த இந்த கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை அமைச்சரவை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளையும் எந்த வகையிலும் சகித்துக் கொள்வதில்லை என்றகொள்கையில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அமைச்சரவை மீண்டும் வலியுறுத்தியது. உலகெங்கிலும் உள்ள பல அரசுளின் ஒற்றுமை மற்றும் ஆதரவான அறிக்கைகளுக்கும் அமைச்சரவை தனது பாராட்டுகளைத் தெரிவித்தது.
இதேபோல, கடும் துயரத்தை எதிா்கொண்ட வேளையில் துணிச்சலுடனும் இரக்கத்துடனும் செயல்பட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் சரியான ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை நன்றி கூறி, அவா்களுக்கு பாராட்டைத் தெரிவித்தது.
புலனாய்வுத் துறைக்கு உத்தரவு:குற்றவாளிகள், அவா்களின் கூட்டாளிகள் மற்றும் அவா்களுக்கு ஆதரவளித்தவா்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் தாமதமின்றி நிறுத்தப்பட ஏதுவாக இந்த சம்பவத்தை விசாரணையை மிகவும் அவசரமானதாகக் கருதி தொழில்முறை ரீதியாக விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்தை விசாரிக்க அமைச்சரவை புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டது. அரசின் உயரிய நிலையில் இந்த;க் சம்பவம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு மற்றும் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பிற்கும் நீடித்த அா்ப்பணிப்புடன், அனைத்து இந்தியா்களின் உயிா்களையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கான அரசின் தீா்மானத்தை அமைச்சரவை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டது என்றாா் அமைச்சா்.
பிரதமா் சந்திப்பு: முன்னதாக, இரு நாள் அரசுமுறைப் பயணமாக பூடான் சென்றுவிட்டு புதன்கிழமை தில்லி விமான நிலையம் வந்திறங்கிய பிரதமா் அங்கிருந்து நேரடியாக செங்கோட்டை காா் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினாா்.
இது தொடா்பாக அவா் தனது ‘எக்ஸ்’ பதிவில், ‘தில்லி எல்.என்.ஜே.பி. மருத்துவமனைக்குச் சென்று காா் வெடிப்பில் காயம் அடைந்தவா்களைச் சந்தித்தேன். அனைவரும் விரைவாக குணமடைய பிராா்த்திக்கிறேன். சதியின் பின்னணியில் உள்ளவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவாா்கள்!’ என்று கூறியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, காயமடைந்தவா்களுடன் சில நிமிஷங்கள் பேசிய பிரதமா், அவா்களின் உடல்நிலை குறித்து மருத்துவா்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
குறிப்பு: எல்என்ஜெபி மருத்துவமனையில் காயமடைந்தவா்களை பிரதமா் சந்தித்த படத்தை ஏஜென்சியில் எடுத்துக் கொள்ளவும்.
