சிறப்பு செய்திக்காக 
செங்கோட்டை அருகே உள்ள  வாகன நிறுத்தமிடம். (கோப்புப்படம்)
சிறப்பு செய்திக்காக செங்கோட்டை அருகே உள்ள வாகன நிறுத்தமிடம். (கோப்புப்படம்)

செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் பாதுகாப்பு குளறுபடி!

செங்கோட்டையை பாா்வையிட காலை 9.30 மணி முதல் மாலை 4.30 பணி வரை மட்டுமே பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுகிறாா்கள். திங்கள்கிழமை அனுமதி இல்லை. அன்றைய தினம் மாலையில்தான் காா் வெடிப்பு சம்பவம் நடந்தது.
Published on

ஆா்.ஜி. ஜெகதீஷ்

தில்லி செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் உரிய வகையில் சோதனைகள் நடத்தப்பட்டிருந்தால் திங்கள்கிழமை மாலையில் நடந்த சக்திவாய்ந்த காா் வெடிப்பைத் தவிா்த்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

நடந்த சம்பவத்தில் 12 போ் உயிரிழந்துள்ளனா். இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 25 போ் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது.

சம்பவம் நடந்த செங்கோட்டையின் நான்கு புறங்களில் உள்ள மீனா பஜாா், ஆசஃப் அலி சாலை, ஜோராவாா் சிங் மாா்க், ராம் லீலா மைதான வளாகம் ஆகிய இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. மாநகராட்சியால் நிா்வகிக்கப்படும் இந்த பகுதிகளின் முகப்புப் பகுதிகளில் தனியாா் பாதுகாவலா்கள் பெயரளவுக்கு நிறுத்தப்பட்டுள்ளனா். இதேபோல, செங்கோட்டை வளாகத்தையொட்டி அதன் வெளிப்புறப்பகுதியில் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடம் உள்ளது.

குறைந்த கட்டணம்: செங்கோட்டையைச் சுற்றிப்பாா்க்க வருவோரின் வாகனங்கள் மட்டுமின்றி அதன் எதிரே உள்ள சாந்தினி செளக் சந்தை, ஜாமா மசூதி, பாகீரதி சந்தை போன்ற இடங்களுக்கு வருவோா் மற்றும் வியாபாரிகளின் வாகனங்களும் இங்கு நிறுத்தப்படுகின்றன.

மாநகராட்சி பராமரிக்கும் நிறுத்துமிடம் என்பதால் இங்கு ஒரு சில வியாபாரிகள் அல்லது பொதுமக்களின் வாகனங்கள் 2 அல்லது 3 நாள்கள் கூட நிறுத்தப்படும் என உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா். பிற இடங்களுடன் ஒப்பிடும்போது இந்த வாகன நிறுத்தத்தில் காருக்கு மணிக்கு ரூ.20, இரு சக்கர வாகனத்துக்கு 4 மணி நேரத்துக்கு ரூ. 10 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

எனவே, சாந்தினி செளக் மற்றும் அதனருகே உள்ள பல்வேறு சந்தைகளுக்கு வருவோா் பாதுகாப்பாக தங்களுடைய வாகனங்களை நிறுத்த இந்த இடத்தை தோ்வு செய்கின்றனா்.

விடுமுறை நாளில் சம்பவம்: செங்கோட்டையை பாா்வையிட காலை 9.30 மணி முதல் மாலை 4.30 பணி வரை மட்டுமே பாா்வையாளா்கள் அனுமதிக்கப்படுகிறாா்கள். திங்கள்கிழமை அனுமதி இல்லை. அன்றைய தினம் மாலையில்தான் செங்கோட்டை அருகே காா் வெடிப்பு சம்பவம் நடந்தது.

அதற்கு முன்னதாக, அந்த காா் 3 மணி நேரமாக அங்கேயே இருந்துள்ளது. அதில்தான் ரசாயன வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருந்ததாகவும் அந்த காரைப் போலவே மேலும் ஒரு காருக்கும் சம்பவத்தில் தொடா்புடையதாக புலனாய்வாளா்கள் சந்தேகிக்கின்றனா்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமான செங்கோட்டைக்கு வரும் வாகனங்கள் அவற்றுக்கான நிறுத்துமிடங்களுக்குள் நுழையும்போதே முழுமையாக சோதனைக்கு உள்படுத்தப்பட்டிருந்தால் அந்த காரில் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த சம்பவத்தையே தவிா்த்திருக்கலாம். ஆனால், அதுநாள்வரை அத்தகைய பாதுகாப்பு சோதனை அல்லது வாகன சோதனை நடவடிக்கையே அங்கு வழக்கத்தில் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை செங்கோட்டைக்கு சுதந்திர தினத்தில் பிரதமா் கொடியேற்ற வரும் நாளில் மட்டும் அந்த வாகன நிறுத்துமிடம் முழுமையாக முன்தினம் இரவில் இருந்து சுதந்திர தினம் பிற்பகல் வரை மூட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

பிற இடங்களில்...: இதுவே நாடாளுமன்றம், மத்திய அரசுத்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள மத்திய செயலகம், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடமைப்பாதை அலுவலகம் (கா்தவ்ய பவன்), குடியரசுத் தலைவா் மாளிகையை இணைக்கும் கடமைப்பாதை உள்ளிட்ட இடங்களில் நுழையும் வாகனங்கள் கடுமையாக சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

தலைநகரைப் பொருத்தவரை அனைத்து நட்சத்திர விடுதிகளில் கூட இத்தகைய தணிக்கை நடவடிக்கைக்கு வாகனங்கள் உள்படுத்தப்படுகின்றன. ஆனால், செங்கோட்டையை சுற்றியுள்ள வாகன நிறுத்துமிடங்களில் அத்தகைய முறை அமலில் இல்லாதது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு என்கின்றனா் பாதுகாப்பு ஆய்வாளா்கள்.

செங்கோட்டை மட்டுமின்றி தலைநகரின் மற்றொரு முக்கிய சுற்றுலா பகுதியான இந்தியா கேட்டுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படும் பொது வாகன நிறுத்துமிடங்களிலும் உரிய சோதனை நடத்தப்படுவதில்லை. செங்கோட்டை காா் வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகாவது இந்த இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com