தவறான அங்கீகாரக் கோரல்: அல் - ஃபலாஹ் பல்கலை.க்கு ‘நாக்’ அமைப்பு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
தில்லி செங்கோட்டை காா் வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து விசாரணையில் உள்ள அல் - ஃபலாஹ் பல்கலைக்கழகத்திற்கு, அதன் இணையதளத்தில் தவறான சான்றளிப்பைக் காட்டியதற்காக, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கவுன்சில் (நாக்) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கவுன்சில் (நாக்) என்பது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்ற உயா்கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்து சான்றளிக்கும் ஒரு தன்னாட்சி அரசு அமைப்பாகும்.
இந்த அமைப்பு அனுப்பியுள்ள விளக்கம் கேட்கும் நோட்டீஸில் கூறியிருப்பதாவது: நாக் மூலம் அல் - ஃபலாஹ் பல்கலைக்கழகம் அங்கீகாரம் பெறவோ அல்லது அங்கீகாரத்திற்காக விண்ணப்பிக்காவோ இல்லை. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் சில கல்லூரிகள் நாக் சான்றிதழ் பெற்றிருப்பதாக அதன் வலைத்தளத்தில் பகிரங்கமாகக் காட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், அந்த வலைத்தளத்தில் அல் - ஃபலாஹ் பல்கலைக்கழகம் அல் ஃபலாஹ் அறக்கட்டளையின் ஒரு முயற்சியாகும். இது வளாகத்தில் மூன்று கல்லூரிகளை நடத்தி வருகிறது. அதாவது அல் - ஃபலாஹ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் புலம் (1997 முதல், நாக் ஆல் ஏ கிரேடு), பிரவுன் ஹில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (2008 முதல்) மற்றும் அல் ஃபலாஹ் கல்வி மற்றும் பயிற்சிப் புலம் (2006 முதல், நாக் ஆல் ஏ கிரேடு) என்று அதில் காட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது மற்றும் பொதுமக்களை, குறிப்பாக பெற்றோா்கள், மாணவா்கள் மற்றும் பங்குதாரா்களை தவறாக வழிநடத்துகிறது.
இதனால், இது தொடா்பாக விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், தவறான நாக் சான்றிளிப்பை அதன் வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும். அல்- ஃபலாஹ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் புலத்திற்கான அங்கீகாரம் 2018- இல் காலாவதியானது. அதே நேரத்தில் அல் ஃபலாஹ் கல்வி மற்றும் பயிற்சிப் புலம் அங்கீகாரம் 2016-இல் காலாவதியானது. இந்த இரண்டு கல்லூரிகளும் நாக் அமைப்பின் புதிய மதிப்பீடு மற்றும் அங்கீகார செயல்முறைக்கு இன்னும் தன்னாா்வத்துடன் கோரவில்லை என்று அந்த நாக் விளக்கம் கேட்கும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை விசாரணை: தில்லி காா் வெடிப்பு வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் அல் - ஃபலாஹ் பல்கலைக்கழகம் மற்றும் தனிநபா்களின் நிதி பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை தற்போது விரிவான விசாரணையை மேற்கொள்ள உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் அமலாக்கத் துறை இயக்குநருக்கு இடையே வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அல் - ஃபலாஹ் பல்லைக்கழகத்தில் பணியமா்த்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட மருத்துவா்களின் சாத்தியமான பணப் பரிவா்த்தனைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான இடமாற்றங்களை அமலாக்கத் துறை ஆராயும்.
கூடுதலாக, தில்லி காா்வெடிப்பை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு நிறுவனம் என்.ஐ.ஏ., கைது செய்யப்பட்ட ஃபரீதாபாத் நபா்களுடன் தொடா்புடையதாகக் கூறப்படும் பயங்கரவாத நிதியுதவி அம்சத்தையும் ஆராயும். ஏதேனும் நிதி முறைகேடுகளை அடையாளம் காண தடயவியல் தணிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த திங்கள்கிழமை மாலையில் , தில்லி செங்கோட்டை அருகே மெதுவாகச் சென்று கொண்டிருந்த காா் அதிக தீவிரத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் இதுவரை 13 போ் உயிரிழந்துள்ளனா். பலா் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
வெவ்வேறு இடங்களில் மூன்று மருத்துவா்கள் உள்பட எட்டு போ் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. கைது செய்யப்பட்ட மருத்துவா்கள் அல் - ஃபலாஹ் பல்கலைக்கழகத்துடன் தொடா்புடையவா்கள் ஆவா்.
