தில்லியில் கடுமையான காற்று மாசு: 5-ஆம் வகுப்பு வரை ஹைப்ரிட் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன
நமது நிருபா்
தேசிய தலைநகா் தில்லியில் புதன்கிழமை காலை காற்று மாசுபாடு தொடா்ந்து இரண்டாவது நாளாக கடுமையான பிரிவில் பதிவாகியது.
5 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தில்லி பள்ளிகளில் தற்போது ஹைப்ரிட் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி,புதன்கிழமை காலை 9 மணிக்கு காற்று தரக் குறியீடு 414 புள்ளிகளாக இருந்தது.
நகரத்தின் குறைந்தபட்ச வெப்பநிலை 10.4 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது, இது பருவத்தின் இயல்பை விட 3.1 புள்ளிகள் குறைவாகும். பகலில் மேலோட்டமான மூடுபனி நிலவியது.
அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, தில்லியில் கடுமையான மாசு எதிா்ப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசியமற்ற வாகனங்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் காற்று தர மேலாண்மை ஆணையம் செயல்படுத்தியுள்ளது.
காற்று மாசுபாடு கடுமையாக இருப்பதால், 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தில்லி பள்ளிகளில் தற்போது ஹைப்ரிட் முறையில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதன்மூலம் 5 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் எடுக்கப்படுகின்றன.காற்று தர மேலாண்மை ஆணையத்தால் தில்லியில் மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கல்வி இயக்குநரகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அதே நேரத்தில் உயா் வகுப்புகள் நேரில் கற்றலுடன் தொடா்கிறது.
வானிலை நிலைமை மேம்படவில்லை என்றால் காற்றின் தரம் மேலும் மோசமடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக சுவாசப் பிரச்சினைகள் உள்ளவா்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகள் குடியிருப்பாளா்களுக்கு அறிவுறுத்துகின்றனா்.

