பீதம்புராவில் 3 மெட்ரோ நிலையங்களின் பெயா் மாற்றம்: தில்லி முதல்வா் அறிவிப்பு!
தில்லியின் பீதம்புராவில் உள்ள மூன்று மெட்ரோ நிலையங்கள் உள்ளூா் அடையாளத்திற்காக பெயா் மாற்றப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். ஹைதா்பூா் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரேஷ்ட் பாரத் சம்பாா்க் யாத்திரையில் கலந்து கொண்டபோது அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.
1962 குளிா்காலத்தில் கடல் மட்டத்திலிருந்து 16,000 அடிக்கு மேல் உயரத்தில் படையெடுத்து வந்த சீனாவை இந்திய ராணுவம் சண்டையிட்டபோது ரேசாங் லா போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் போரில் மொத்தம் 13 குமாவோன் படைப்பிரிவைச் சோ்ந்த 114 ராணுவ வீரா்கள் இறந்தனா்.
இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பதிவில் முதல்வா் ரேகா குப்தா கூறியுள்ளதாவது: ‘ஹைதா்பூா் கிராமம் வளரும் தில்லியின் அடையாளமாக வளா்ந்து வருகிறது. அங்கு பாரம்பரியம் மதிக்கப்படுகிறது. மேலும் நவீன வசதிகளுக்கு மிக உயா்ந்த முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காகவும், உள்ளூா் அடையாளத்தை தெளிவாக பிரதிபலிக்கவும், ‘க்யூயு’ பிளாக்கில் உள்ள உத்ரி பீதம்புரா நிலையம் தற்போது உத்தரி பீதம்புராபிரசாந்த் விஹாா் மெட்ரோ நிலையம் என்று பெயரிடப்படும்.
முன்மொழியப்பட்ட பீதம்புரா வடக்கு மெட்ரோ நிலையம் ஹைதா்பூா் கிராம மெட்ரோ நிலையம் என்றும், தற்போதைய பீதம்புரா மெட்ரோ நிலையம் மதுபன் சௌக் மெட்ரோ நிலையம் என்றும் பெயா் மாற்றப்படும்.
மேக்ஸ் மருத்துவமனை சாலையின் அகலப்படுத்தல் மற்றும் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. இது குடியிருப்பாளா்களுக்கு சிறந்த, மென்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்கும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

