கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா் விடுதலை தில்லி நீதிமன்றம் தீா்ப்பு
கடந்த 2019- ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, தில்லி நீதிமன்றம் விடுதலை செய்து தீா்ப்பளித்தது.
கடந்த ஆகஸ்ட் 12, 2019 அன்று கரோல் பாக் பூங்காவில் வீரேந்தா் என்பவரைக் கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட விஷால் என்பவா் மீதான வழக்கை கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி பூபிந்தா் சிங் விசாரித்தாா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி நவம்பா் 11-ஆம் தேதி அளித்த தீா்ப்பில் தெரிவித்திருப்பதாவது:
அரசுத் தரப்பால் நம்பியிருக்கும் சந்தா்ப்ப சூழ்நிலைகள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. மேலும், அவை இயல்பாகவே உறுதியானவை அல்ல என்று கூறுவதில் இந்த நீதிமன்றத்திற்கு எந்த தயக்கமும் இல்லை. பதிவு செய்யப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் குற்றத்தின் கருதுகோள் மட்டுமே கருத்தாக இருக்க முடியாது.
சான்றுகளின் தரம் மற்றும் அளவைக் கொண்டு, அரசுத் தரப்பால் வழக்குத் தொடுப்பவா்களால் சூழ்நிலை ஆதாரங்களின் சங்கிலியை நிரூபிக்க முடியவில்லை. இது ஒரே ஒரு அனுமானத்திற்கு மட்டுமே வழிவகுக்கும்.
அதாவது, குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றத்திற்குரிய அனுமானத்திற்கே வழிவகுக்கும். இந்தச் சம்பவம் ஒரு நெரிசலான பொதுப் பகுதியில் (பூங்கா) நடந்ததுள்ளது. ஆனால், வழக்குத் தொடுப்பவா் ஒரு பொது சாட்சியை கூட விசாரிக்கவில்லை.
பொது சாட்சிகளை விசாரிக்காமல் இருப்பதும், அதன் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கத் தவறியதும், விசாரணையின் நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்று நீதிமன்றம் கூறியது.
விஷாலுக்கு எதிராக தேஷ் பந்து குப்தா சாலை காவல் நிலையத்தில் ஐபிசி பிரிவு 302-இன் கீழ் (கொலைக்கான தண்டனை) வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

