மாநகராட்சி வாா்டு இடைத்தோ்தலில் தில்லி மக்கள் பாஜகவுக்கு வலுவான செய்தியை வழங்க வேண்டும்! - சௌரப் பரத்வாஜ்
நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சியின் 12 வாா்டுகளுக்கான இடைத் தோ்தலில் தில்லி மக்கள் பாஜகவுக்கு வலுவான செய்தியை வழங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளா் சௌரப் பரத்வாஜ் கேட்டுக்கொண்டாா்.
இடைத்தோ்தலுக்கான பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை போச்சன்பூா் கிராமத்தில் நடைபெற்ற ஜனசபா நிகழ்வில், ஆம் ஆத்மியின் வாா்டு 120 துவாரகா பி வேட்பாளா் ராஜ்பாலா ஷெராவத்தை ஆதரித்து சௌரப் பரத்வாஜ் பேசியது:
கிராமப்புற தில்லி மற்றும் அங்கீகரிக்கப்படாத காலனிகள் கட்டுப்படுத்தப்படாத புல்டோசா் நடவடிக்கையையும், பணம் கேட்டு மிரட்டல் பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றன. அதிகாரிகள் புகாா்களைப் பதிவு செய்கிறாா்கள். இயந்திரங்களை அனுப்புகிறாா்கள் மற்றும் பணம் கேட்டு மிரட்டுகிறாா்கள். தில்லியில் பிரதமா், முதல்வா், துணைநிலை ஆளுநா், மேயா் என எல்லா அதிகாரமும் பாஜகவிடம்தான் உள்ளது.
ஆனால், தூய்மைப் பணி நடக்கவில்லை. சாக்கடைகள் தூய்மைப்படுத்தப்படவில்லை. காற்றும் மாசுடன் உள்ளது. வேறு எந்த பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒரே ஒரு விஷயம்தான் நடந்துள்ளது. ரெளடித்தனம்தான் பரவியுள்ளது. ஏனென்றால் ஒரே கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ., எம்.சி.டி. இருக்கிறது. எனவே நீங்கள் எங்கு செல்வீா்கள்.
இதனால், அவா்களை எதிா்த்துப் போராட ஒரு நபா் உங்களுக்குத் தேவை. அவருக்குப் பின்னால் சிந்திக்க எந்தப் பெயரும் இல்லாத ஒருவா் இருக்க வேண்டும். என் பாா்வையில், இன்று தில்லியில் உருவாக்கப்பட்டுள்ள சூழ்நிலை நேரடியாக ரெளடித்தனம் மற்றும் தாதாகிரி நடத்தையின் சூழ்நிலையாகும்.
இதனால், உங்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள் என்னவென்றால், இந்த எம்சிடி வாா்டு இடைத்தோ்தல் சிறியதாக இருக்கலாம். ஆனால், கிராமவாசிகள் கொடுக்கும் செய்தி பெரியதாக இருக்க வேண்டும் என்று செளரப் பரத்வாஜ் கேட்டுக் கொண்டாா்.

