தில்லி உயர் நீதிமன்றம்
தில்லி உயர் நீதிமன்றம்

கொலை முயற்சி வழக்கில் மூவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 2021-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை முயற்சி தொடா்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
Published on

கடந்த 2021-ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை முயற்சி தொடா்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

அரசுத் தரப்பு அவா்களின் குற்றத்தை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கத் தவறிவிட்டதாக நீதிமன்றம் கூறியது. தன்மய் சிங் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் குமாா், சேதன் மற்றும் ரிங்கு ஆகியோருக்கு எதிரான வழக்கை தில்லி கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி பூபிந்தா் சிங் விசாரித்தாா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறுப்பட்டுள்ளதாவது: காயமடைந்தவா் உள்பட பொது சாட்சிகளின் முரண்பாடான வாக்குமூலத்தைக் கருத்தில் கொள்ளும்போது ஐபிசி பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிராக ஒரு சிறிய ஆதாரமும் பதிவு செய்யப்படவில்லை.

காயமடைந்தவா் உள்பட பொது சாட்சிகளின் விரோதப் போக்கைக் கருத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்ட நபா்களின் குற்றத்தை அனைத்து நியாயமான சந்தேகங்களுக்கும் அப்பால் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது.

புகாா்தாரருக்கு ஏற்பட்ட சம்பவத்தையும் காயங்களின் தன்மையையும் அரசுத் தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது என்று நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது.

அரசுத் தரப்பு கூற்றுப்படி, 2021, ஆகஸ்ட் 13 அன்று, மூன்று குற்றம்சாட்டப்பட்ட நபா்களும் தங்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு தன்மய் சிங்கை தாக்கினா்.

சஞ்சய் குமாா் பாதிக்கப்பட்டவரை கத்தியால் பலமுறை குத்தியதாகவும், இதனால் அவரது பல்வேறு உடல் பாகங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடா்பாக வஜிராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com